/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பசூர் உதவி மின் பொறியாளர் அலுவலகத்தை மூட முயற்சி
/
பசூர் உதவி மின் பொறியாளர் அலுவலகத்தை மூட முயற்சி
ADDED : மார் 21, 2025 10:55 PM
அன்னுார்; பசூர் உதவி மின் பொறியாளர் அலுவலகத்தை மூட மின்வாரியம் முயற்சிப்பதாக புகார் எழுந்துள்ளது.
அன்னுார் வட்டாரத்தில், அன்னுார் மற்றும் கரியாம்பாளையத்தில் உதவி கோட்ட மின் பொறியாளர் அலுவலகங்கள் உள்ளன. இத்துடன், அன்னுார், வடக்கலூர், பசூர், பொகலூர், பொன்னேகவுண்டன் புதூர் ஆகிய ஊர்களில் உதவி மின் பொறியாளர் அலுவலகங்கள் உள்ளன.
இந்நிலையில், பசூரில் உள்ள உதவி மின் பொறியாளர் அலுவலகத்தை மூட மின் வாரியம் முடிவு செய்துள்ளதாக புகார் எழுந்துள்ளது.
இதுகுறித்து பசூர் பகுதி மின் நுகர்வோர்கள் கூறுகையில், 'பசூர் உதவி மின் பொறியாளர் அலுவலகத்திற்கு கீழ் பசூர், புதுப்பாளையம், தொக்கு பாளையம், மத்திரெட்டி பாளையம், அம்மா செட்டி புதூர், பொங்கலூர் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட ஊர்கள் உள்ளன.
இப்பகுதியைச் சேர்ந்தவர்கள் வீட்டு மின் இணைப்பு, வர்த்தக மின் இணைப்பு மற்றும் மும்முனை மின் இணைப்புகளுக்கு, பசூரில் உள்ள உதவி மின் பொறியாளர் அலுவலகத்தில் விண்ணப்பித்து இணைப்பு பெற்று வருகின்றனர்.
இந்நிலையில், பசூரில் உள்ள உதவி மின் பொறியாளர் அலுவலகத்தை மூடி விட்டு, திருப்பூர் மாவட்டத்தில், சேவூர் அருகே உள்ள தண்டுக்காரன்பாளையத்தில் உதவி மின் பொறியாளர் அலுவலகம் அமைக்க அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
இதனால் இப்பகுதி மக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாவார்கள். இங்கிருந்து தண்டுக்காரன்பாளையத்திற்கு இப்பகுதி மக்கள் இரண்டு அல்லது மூன்று பஸ்கள் மாறி செல்ல வேண்டும். மேலும் அதிக தொலைவு உள்ளது.
எனவே, பசூரில் உள்ள உதவி மின் பொறியாளர் அலுவலகத்தை மூடும் முயற்சியை மின்வாரியம் கைவிட வேண்டும். இல்லாவிட்டால், மின்நுகர்வோர் ஒன்றிணைந்து போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம்,' என்றனர்.