/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அரையாண்டு விடுமுறையில் பிள்ளைகள் மீது கவனம் தேவை
/
அரையாண்டு விடுமுறையில் பிள்ளைகள் மீது கவனம் தேவை
அரையாண்டு விடுமுறையில் பிள்ளைகள் மீது கவனம் தேவை
அரையாண்டு விடுமுறையில் பிள்ளைகள் மீது கவனம் தேவை
ADDED : ஜன 01, 2026 05:18 AM
கோவை: பள்ளிகளுக்கு அரையாண்டுத் தேர்வு விடுமுறை நடந்து வரும் நிலையில், மாணவர்களின் செயல்பாடுகள் மற்றும் பாதுகாப்பு குறித்து பெற்றோர்கள் கூடுதல் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என, உளவியல் நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
விடுமுறை நாட்களில் பள்ளி சூழலில் இருந்து விலகி இருக்கும் மாணவர்கள், நண்பர்களுடன் அதிக நேரத்தை செலவிடுகின்றனர். தற்போது பெரும்பாலான வீடுகளில் பெற்றோர் இருவரும் வேலைக்கு செல்லும் சூழலில், வீட்டில் தனியாக இருக்கும் குழந்தைகள் தவறான பழக்கங்களுக்கு ஆளாகும் அபாயம் உள்ளது. குறிப்பாக, கட்டுப்பாடற்ற மொபைல் போன் பயன்பாடு மாணவர்களின் எதிர்காலத்தைப் பாதிக்கும் முக்கிய காரணியாக மாறியுள்ளது.
அதிகரிக்கும் 'கூல் லிப்' மாவட்ட புகையிலை கட்டுப்பாட்டு அதிகாரிகள் கூறுகையில், மாவட்டத்தில் உள்ள 10 பள்ளிகளில் 3 பள்ளிகளில், 6 முதல் 10ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களிடம் 'கூல் லிப்' போன்ற புகையிலை பழக்க ம் அதிகளவில் உள்ளது.
சக நண்பர்களின் கட்டாயத்தினாலும், தேவையற்ற ஆர்வத்தினாலும் மாணவர்கள் இப்பழக்கத்திற்கு அடிமையாகின்றனர். பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு வரும்போது ஒரு சிலர் இப்பழக்கத்தை கைவிட்டாலும், ஆரம்ப நிலையில் இது பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது, எனத் தெரிவித்தனர்.
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு மைய அதிகாரிகள் கூறுகையில், குடும்ப சூழ்நிலை, சமூக பாதிப்புகள் மற்றும் பதின்பருவம் சார்ந்த பிரச்னைகளால் மாணவிகள் பல்வேறு உளவியல் சிக்கல்களுக்கு ஆளாகின்றனர்.
ஆசிரியர்களின் பரிந்துரையின் பேரில் இவர்களுக்குத் தேவையான ஆலோசனைகளும் வழிகாட்டுதல்களும் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக, தாய் அல்லது தந்தையுடன் உள்ள குழந்தைகள் எதிர்கொள்ளும் பிரச்னைகள் அதிகம், என்றனர்.
'தனித்திறன் வளர்ப்பில்
கவனம் வேண்டும்'
தமிழ்நாடு உளவியல் சங்கத்தின் மாநிலத் தலைவர் பாலமுருகன் கூறுகையில், ''அரசு சிறப்பு வகுப்புகளை நடத்த வேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ள இந்த விடுமுறை காலத்தில், மாணவர்களின் தனித்திறன்களை வளர்க்கும் விளையாட்டு, கலை மற்றும் சமூக நலன் சார்ந்த செயல்பாடுகளில் ஈடுபடுத்த வேண்டும். கல்வி என்பது வெறும் மதிப்பெண்கள் சார்ந்தது மட்டுமல்ல; அது வாழ்க்கைத் திறன்களை வளர்ப்பதாகவும் இருக்க வேண்டும். எனவே, விடுமுறை நாட்களைப் பயனுள்ள முறையில் கழிக்க, பெற்றோர்கள் வழிவகை செய்ய வேண்டும், '' என்றார்.

