ADDED : ஆக 30, 2026 06:42 PM

மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம்–அவினாசி சாலை விரிவாக்கம் பணிகள், கடந்த இரண்டு மாதங்களாக நடைபெறாமல் உள்ளன.
மேட்டுப்பாளையம்–அவிநாசி இடையே உள்ள, 38 கிலோமீட்டருக்கு இரு வழி சாலை நான்கு வழிச்சாலையாக விரிவுப்படுத்தப்படுகிறது. தேவையான இடங்களில் புதிதாக பாலங்கள் கட்டும் பணிகளும், விரிவாக்கம் செய்யும் பணிகளும் நடைபெறுகின்றன.
மேட்டுப்பாளையம் அருகே நடூரிலும், அன்னூர் சாலையில் அரசு கலைக்கல்லூரி செல்லும் பிரிவிலும், புதிய பாலம் கட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன. கடந்த இரண்டு மாதங்களாக பணிகள் நடைபெறாததால், நடூர் அருகே பாலத்தில் கட்டியுள்ள கம்பிகள் துருப்பிடிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. நடூர் பாலம் அருகே சாலை விரிவாக்கம் செய்ய, சாலையின் ஓரத்தில் இருந்த, 10 வீடுகளில் குடியிருந்தவர்களை வெளியேற்றி, வீடுகளை இடித்தனர். ஆனால் வீடுகள் இடித்து இரண்டு மாதத்திற்கு மேலாகியும், எவ்வித சாலை விரிவாக்க பணிகளும் நடைபெறாமல் உள்ளன. எனவே மாவட்ட நிர்வாகம், பாலம் கட்டவும், சாலை விரிவாக்கம் செய்யவும், துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து நெடுஞ்சாலை துறை அதிகாரியை தொடர்பு கொண்ட போது, பணியாளர்கள் ஊருக்கு சென்றவர்கள், அடுத்த வாரம் திரும்பி வர உள்ளனர். அவர்கள் வந்தவுடன் பணிகள் துரிதமாக நடைபெறும், என்றார்.
