/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பசுமை தீபாவளி கொண்டாட மாணவர்களுக்கு விழிப்புணர்வு
/
பசுமை தீபாவளி கொண்டாட மாணவர்களுக்கு விழிப்புணர்வு
ADDED : அக் 21, 2024 06:11 AM
பொள்ளாச்சி: தீபாவளியை பட்டாசு இன்றி, பசுமையை வலியுறுத்தும் வகையில் கொண்டாட பள்ளி மாணவர்களிடையே விழப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.
தீபாவளி தினத்தன்று, சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை, பட்டாசுகளை வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்துவர். அதேவேளையில், பட்டாசு வெடிப்பதால் நிலம், நீர், காற்று உள்ளிட்டவை பெருமளவில் மாசுபடுகின்றன.
பட்டாசு வெடிப்பதால் எழும் அதிகப்படியான ஒலி மற்றும் காற்று மாசு காரணமாக, குழந்தைகள், முதியோர், நோயாளிகள் பலரும் உடல் மற்றும் மனதளவில் பாதிக்கின்றனர். இதன் காரணமாக, பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில், பசுமை தீபாவளியை கொண்டாட மாணவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு வருகிறது.
தலைமையாசிரியர்கள் கூறியதாவது:
தீபாவளி பண்டிகையன்று வழக்கமாக, காலை, 6:00 முதல் 7:00 மணி வரையும், இரவு, 7:00 முதல் 8:00 மணி வரையில் மட்டுமே ஒலி எழுப்பும் பட்டாசுகளை வெடிக்க அனுமதி வழங்கப்படும்.
இருப்பினும், ஒலி மாசுவை கட்டுப்படுத்தும் வகையில், மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. குறைந்த ஒலியுடனும், குறைந்த அளவில் காற்று மாசுபடுத்தும் தன்மையும் கொண்ட பசுமை பட்டாசுகளை மட்டுமே வெடிக்க அறிவுரை வழங்கப்படும். குறிப்பாக, பட்டாசு வாங்குவதை தவிர்த்து, ஆடை, காலனி வாங்கிப் பயன்படுத்தவும் தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.