பிளாஸ்டிக் கொண்டு செல்ல தடை: எல்.இ.டி., போர்டில் விழிப்புணர்வு
பிளாஸ்டிக் கொண்டு செல்ல தடை: எல்.இ.டி., போர்டில் விழிப்புணர்வு
UPDATED : ஜூலை 16, 2026 06:45 PM
ADDED : ஜூலை 16, 2026 06:41 PM
மேட்டுப்பாளையம்: நீலகிரி மாவட்டத்துக்குள் ஒரு முறை பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் கவர்கள், கப்புகள், ஒரு லிட்டர் வாட்டர் பாட்டில்கள், பல்வேறு வகை பிளாஸ்டிக்குகள் கொண்டு செல்ல தடை செய்யப்பட்டுள்ளது. இதற்காக, மேட்டுப்பாளையத்தில், நீலகிரி மாவட்டத்தின் நுழைவு வாயிலான கல்லாறு பகுதியில் உள்ள இ - பாஸ் சோதனைச் சாவடியில், வரும் வாகனங்களில் பிளாஸ்டிக் பொருட்கள் உள்ளனவா என சோதனை செய்யப்படுகிறது. இருந்தால், பறிமுதல் செய்யப்படுகின்றன.
சுற்றுலா பயணிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த, சோதனைச் சாவடியின் முகப்பில் பிளாஸ்டிக் ஒழிப்பு தொடர்பாக, எல்.இ.டி., போர்டு வைக்கப்பட்டுள்ளது. இதில், 'தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை, நீலகிரி மாவட்டத்துக்குள் கொண்டு செல்லக்கூடாது. கொண்டு செல்லும் பட்சத்தில், ஆயிரம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும்' என வாசகங்கள் இடம் பெற்றுள்ளன.
சோதனைச் சாவடி ஊழியர்கள் கூறுகையில், 'நீலகிரி மாவட்டத்துக்குள் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் கொண்டு செல்வது தொடர்பாக, பொதுமக்களுக்கும், சுற்றுலாப் பயணிகளுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தவே, இந்த போர்டு வைக்கப்பட்டுள்ளது. பலருக்கும், சோதனைச் சாவடி வரும் வரை பிளாஸ்டிக் கொண்டு செல்ல தடை இருப்பது தெரியவில்லை. இந்த போர்டு வாயிலாக அவர்கள் விழிப்புணர்வு அடைகின்றனர்' என்றனர்.
