/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நாய்கள் குட்டிப்போடுவதால் அரசுக்கு கெட்ட பெயர்! மத்திய மண்டல தலைவர் மீனா 'கலகல'
/
நாய்கள் குட்டிப்போடுவதால் அரசுக்கு கெட்ட பெயர்! மத்திய மண்டல தலைவர் மீனா 'கலகல'
நாய்கள் குட்டிப்போடுவதால் அரசுக்கு கெட்ட பெயர்! மத்திய மண்டல தலைவர் மீனா 'கலகல'
நாய்கள் குட்டிப்போடுவதால் அரசுக்கு கெட்ட பெயர்! மத்திய மண்டல தலைவர் மீனா 'கலகல'
ADDED : அக் 23, 2024 11:23 PM

கோவை: கோவையில் தெருநாய்களுக்கு கருத்தடை சிகிச்சை செய்வதில் ஊழல் நடப்பதாக, காங்கிரஸ் கவுன்சில் குழு தலைவர் அழகு ஜெயபாலன், மாமன்ற கூட்டத்தில், பகிரங்கமாக குற்றம் சாட்டினார்.
கோவை மாநகராட்சி பகுதியில், ஒரு லட்சத்து, 15 ஆயிரம் தெரு நாய்கள் இருப்பதாக, சமீபத்தில் எடுத்த கணக்கெடுப்பில் தெரியவந்தது. மூன்று நிறுவனங்கள் கருத்தடை சிகிச்சை அளிக்கின்றன. இதுநாள் வரை, 700 ரூபாய் கட்டணம் வழங்கப்பட்டது.
நாய்களை பிடித்து வந்து, கருத்தடை செய்து மீண்டும் அதே இடத்தில் விடுவதற்கு, 200 ரூபாய், அறுவை சிகிச்சை செய்யவும் பராமரிக்கவும் 1,450 ரூபாய் சேர்த்து, 1,650 ரூபாய் வழங்க மன்றத்தில் தீர்மானம் கொண்டு வரப்பட்டது.
இதுதொடர்பாக, அ.தி.மு.க., கவுன்சிலர் பிரபாகரன் கேள்வி எழுப்பியபோது, ''ஒரு தெருநாய்க்கு, 1,650 ரூபாய் கொடுத்தால், மாதம், 7,000 நாய்கள் பிடிப்பதாக சொல்கிறார்கள். அதன்படி கணக்கிட்டால், பல லட்சம் ரூபாய் செலவாகுமே,'' என்றார்.
கிழக்கு மண்டல தலைவர் லக்குமி இளஞ்செல்வி குறுக்கிட்டு, ''தெருநாய் பெருக்கத்தை கட்டுப்படுத்த, அ.தி.மு.க., ஆட்சி காலத்தில், 10 ஆண்டுகளாக எந்த நடவடிக்கையும் எடுக்காதது தான், அவை பெருக காரணம். ஒரு லட்சம் தெருநாய்கள் சுற்றுவதற்கு அ.தி.மு.க,வே காரணம்,'' என்றார்.
மத்திய மண்டல தலைவர் மீனா பேசுகையில், ''கருத்தடை செய்யப்பட்ட தெருநாய்கள் மீண்டும் குட்டி போடுகின்றன. யார் செய்த தவறு? தமிழக அரசுக்கும், மாநகராட்சிக்கும் அவப்பெயர் ஏற்படுகிறது,'' என்றார்.இவ்வாறு, விவாதம் நடந்தது.