/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வாழை நடவு பராமரிப்பு; விவசாயிகளுக்கு அறிவுரை
/
வாழை நடவு பராமரிப்பு; விவசாயிகளுக்கு அறிவுரை
ADDED : அக் 03, 2025 09:10 PM
கிணத்துக்கடவு; வாழை பராமரிப்பு மற்றும் நடவு முறைகள் குறித்து, தோட்டக்கலை துறையினர் தெரிவித்துள்ளனர்.
கிணத்துக்கடவு சுற்று வட்டாரத்தில், வாழை ஆண்டு தோறும் 150 ஹெக்டேருக்கும் அதிகமாக சாகுபடி செய்யப்படுகிறது. இதில், ஒரு சில பகுதிகளில், வாழை முறையாக பராமரிக்காததால் பல்வேறு குறைபாடுகள் ஏற்படுகிறது.
இதை நிவர்த்தி செய்ய, பராமரிப்பு மற்றும் நடவு முறைகள் குறித்து கிணத்துக்கடவு தோட்டக்கலை துறையினர் ஆலோசனை வழங்கி உள்ளனர்.
வாழை நடவு செய்ய, இரண்டு முதல் மூன்று முறை நிலத்தினை ஆழமாகவும், கட்டிகள் இல்லாமலும் உழவு செய்ய வேண்டும். வாழை கன்றின் வேர்பாகம் சேதமடையாமல், குழியின் நடுப்பகுதியில் வேர்பாகம் முழுவதும் மண்ணுக்குள் செல்லும்படி நடவு செய்ய வேண்டும். வெயில் அதிகம் உள்ள காலங்களில், மாலை நேரத்தில் நடவு செய்ய வேண்டும்.
வாழைக்கு அடி உரமாக, தொழு உரம் - 10 கிலோ அல்லது மண்புழு உரம் -ஒரு கிலோ, வேப்பம் புண்ணாக்கு - 100 கிராம், சூப்பர் பாஸ்பேட் - 25 கிராம், வேம் 20 கிராம், ஜெயசைம் குருணை 10 கிராம் போன்றவைகளை உரமாக இடலாம்.
வாழைக்கு அடி உரம் இடாமல் நடவு செய்தால் கரிமக்கரி (ஆர்கானிக் கார்பன்) சத்து கிடைக்காமல் வேர்களின் எண்ணிக்கை மற்றும் வளர்ச்சி குறைய வாய்ப்புள்ளது.
வாழை நடவு செய்த மூன்று மற்றும் ஐந்தாம் மாதங்களில், வேம் மட்டும் ஜெயசைம் குருணையை ஒவ்வொரு வாழைக்கும், 20 கிராம் இடுவதால் நல்ல விளைச்சலை தரும், என, ஆலோசனை வழங்கியுள்ளனர்.