/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சட்டவிரோதமாக தங்கியிருந்த வங்கதேசத்தினருக்கு சிறை
/
சட்டவிரோதமாக தங்கியிருந்த வங்கதேசத்தினருக்கு சிறை
ADDED : மே 13, 2025 01:10 AM
கோவை; சட்ட விரோதமாக தங்கியிருந்த வங்கதேச வாலிபர்கள் இருவரை, போலீசார் கைது செய்தனர்.
கோவை, துடியலுார் பகுதியில் தனியார் நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு சட்டவிரோதமாக வங்கதேசத்தை சேர்ந்தவர்கள் தங்கி பணிபுரிந்து வருவதாக, போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
தனிப்படை போலீசார் அங்கு சென்று விசாரித்தனர். அந்நிறுவனத்தில் வடமாநில வாலிபர்கள் பலர் பணிபுரிந்து வருவது தெரிந்தது. அவர்களில் வங்கதேசத்தை சேர்ந்த இருவர், சட்டவிரோதமாக எவ்வித ஆவணங்களும் இன்றி தங்கியிருந்தது தெரிந்தது.
இருவரையும் பிடித்த போலீசார் விசாரணை நடத்தினர். அவர்கள் வங்கதேசம் மைமான்சிங் மாவட்டம் திரிசால், சிக்கனாவை சேர்ந்த லோதிப் அலி, 29, சொரீப், 35 எனத் தெரிந்தது. இருவரையும் கைது செய்தனர்.
லோதிப் அலி கடந்த ஓராண்டாகவும், சொரீப், மூன்று ஆண்டுகளாகவும் எவ்வித ஆவணங்களும் இன்றி தங்கி பணிபுரிந்து வந்தது தெரிந்தது. வங்கதேசத்தில் இருந்து சட்டவிரோதமாக மேற்கு வங்க மாநிலத்துக்கு வந்ததும், அம்மாநிலத்தை சேர்ந்தவர்களுடன் கோவை வந்து பணிபுரிந்ததும் தெரிந்தது.
இருவரும் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்களுடன் வங்கதேசத்தை சேர்ந்த வேறு யாரும் வந்து, கோவையில் சட்டவிரோதமாக தங்கியுள்ளனரா என்பது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.