ADDED : செப் 11, 2026 06:21 PM
பொள்ளாச்சி: பொள்ளாச்சியில், கோரிக்கைகளை வலியுறுத்தி வங்கி தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பினர், வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வங்கி தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், கோரிக்கைகளை வலியுறுத்தி ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். பொள்ளாச்சி – கோவை ரோடு பாங்க் ஆப் பரோடா முன்பாக ஆர்பாட்டம் நடந்தது.
பொள்ளாச்சி தாலுகா வங்கி ஊழியர் சங்க பொதுச் செயலாளர் ஜெயபிரகாஷ் தலைமை வகித்தார். வங்கி தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் முன்னிலை வகித்தார். பெடரல் வங்கி அதிகாரி ஜெயபிரகாஷ் நன்றி கூறினார்.
ஆர்ப்பாட்டத்தில், வாரத்தில் ஐந்து நாட்கள் பணிபுரியும் முறையை செயல்படுத்த வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். பி.எல்.ஐ., திட்டத்தில் திருத்தம் செய்ய வேண்டும். வங்கிகளில் எழுத்தர் மற்றும் துணை பணியாளர்களை போதுமான எண்ணிக்கையில் அமர்த்த வேண்டும்.
அனைத்து தனியார் வங்கிகளிலும் கருணைத்தொகை வழங்க வேண்டும். ‘லீவ் பேங்க்’ முறையை அறிமுகப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட, கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. வங்கிகள் வேலை நிறுத்த போராட்டத்தால், 400 கோடி ரூபாய் வர்த்தகம் பாதிக்கப்பட்டதாக நிர்வாகிகள் தெரிவித்தனர்.
