/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பி.ஏ.பி., பாசன நீர் திருட்டை தடுக்க ரோந்து போகணுங்க!: இரு மாவட்ட விவசாயிகள் வலியுறுத்தல்
/
பி.ஏ.பி., பாசன நீர் திருட்டை தடுக்க ரோந்து போகணுங்க!: இரு மாவட்ட விவசாயிகள் வலியுறுத்தல்
பி.ஏ.பி., பாசன நீர் திருட்டை தடுக்க ரோந்து போகணுங்க!: இரு மாவட்ட விவசாயிகள் வலியுறுத்தல்
பி.ஏ.பி., பாசன நீர் திருட்டை தடுக்க ரோந்து போகணுங்க!: இரு மாவட்ட விவசாயிகள் வலியுறுத்தல்
ADDED : ஜன 30, 2025 11:06 PM

உடுமலை: மூன்றாம் மண்டலத்துக்கு திருமூர்த்தி அணையிலிருந்து பாசன நீர் திறக்கப்பட்டுள்ள நிலையில், பிரதான, கிளை கால்வாய்களில், நீர் திருட்டை தடுக்க, ரோந்து குழு அமைத்து, கோவை, திருப்பூர் கலெக்டர்கள் நடவடிக்கை எடுக்க எதிர்பார்ப்பு நிலவுகிறது.
உடுமலை திருமூர்த்தி அணையிலிருந்து, பி.ஏ.பி., மூன்றாம் மண்டலம், கோவை, திருப்பூர் மாவட்டத்திலுள்ள, 94 ஆயிரத்து 362 ஏக்கர் நிலங்களுக்கு நேற்று முன்தினம் பாசன நீர் திறக்கப்பட்டது.
அணையிலிருந்து பிரதான கால்வாயில் வெளியேற்றப்படும் நீர், கிளை மற்றும் பகிர்மான கால்வாய்கள் வாயிலாக விளைநிலங்களுக்கு சென்றடைகிறது. இரண்டாம் மண்டல பாசனம் நிறைவு பெற்ற பிறகு, ஆயக்கட்டு பகுதியில், மழைப்பொழிவு இல்லை.
எனவே பாசன நீரை மட்டுமே ஆதாரமாகக்கொண்டு, மக்காச்சோளம் உள்ளிட்ட சாகுபடிகளுக்கான நடவுப்பணிகளை விவசாயிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
சவால் அதிகம்
மழைப்பொழிவு இல்லாத காலங்களில், பிரதான மற்றும் இதர கால்வாய்களில், செல்லும் பாசன நீர் பல இடங்களில், திருடப்படுவது தொடர்கதையாக உள்ளது. விவசாய பயன்பாட்டுக்கு மட்டுமல்லாது வணிக ரீதியாகவும், பாசன நீர் திருடப்படுகிறது.
பிரதான கால்வாய் கரையையொட்டி, இரவு நேரங்களில் குழாய் அமைத்து, நீரை திருடுகின்றனர்; கரையில் செழித்து வளர்ந்துள்ள புதர்கள், பராமரிக்கப்படாத பாதை; பொதுப்பணித்துறையில் காலி பணியிடங்கள் உள்ளிட்ட பல்வேறு காரணங்கள், தண்ணீர் திருடுபவர்களுக்கு சாதகமாக அமைந்துள்ளது.
இதனால், ஆயக்கட்டு பகுதிகளுக்கு போதியளவு தண்ணீர் கிடைப்பது சவாலாக மாறி விடுகிறது. இது குறித்து புகார் தெரிவித்து, பொதுப்பணித்துறையினர் நடவடிக்கை எடுக்கும் முன் ஒரு சுற்று தண்ணீரே நிறைவு பெற்று, நிலைப்பயிர்கள் பாதிக்கிறது.
கண்காணிப்பு குழு அமைக்கணும்
பி.ஏ.பி., பாசன நீர் திருட்டை தடுக்க, கோவை, திருப்பூர் மாவட்ட நிர்வாகங்கள் சார்பில், ரோந்து, கண்காணிப்பு குழு அமைப்பது வழக்கம். இக்குழுவில், பொதுப்பணித்துறை, போலீஸ், வருவாய்த்துறை, மின்வாரியம் உள்ளிட்ட அதிகாரிகள் இடம் பெறுவார்கள்.
இரவு நேரங்களில், பிரதான மற்றும் கிளை கால்வாய்களில் ரோந்து சென்று நீர் திருட்டில் ஈடுபடுவர்கள் மீது வழக்கு பதிவு செய்வதுடன், மின் இணைப்பை துண்டிக்க பரிந்துரைப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளை இக்குழுவினர் மேற்கொள்கின்றனர்.
ஆனால், பாசன நீர் திறப்புக்கு முன், இக்குழுவை அமைத்து செயல்பாட்டுக்கு கொண்டு வருவதில்லை.
ஒவ்வொரு மண்டல பாசனத்தின் போதும், விவசாயிகள் தொடர்ந்து வலியுறுத்திய பிறகே, குழு அமைக்கப்படுகிறது. குறிப்பாக திருப்பூர் மாவட்டத்தில், ரோந்து குழு அமைப்பதில், ஒவ்வொரு மண்டல பாசனத்தின் போதும், சுணக்கம் நிலவுகிறது.
இதை பயன்படுத்தி, முதல் இரு சுற்றுகளின் போது, அதிகளவு நீர் திருட்டு நடைபெறுகிறது.தற்போது, மூன்றாம் மண்டலம் முதல் சுற்றுக்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ள நிலையில், உடனடியாக குழு அமைத்து ரோந்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இல்லாவிட்டால் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு பாசன நீரை நம்பி பயிர் சாகுபடி செய்துள்ள பல ஆயிரம் ஆயக்கட்டு விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள். எனவே, கோவை, திருப்பூர் கலெக்டர்களின் உடனடி நடவடிக்கையை விவசாயிகள் எதிர்பார்த்துள்ளனர்.