/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பி.ஏ.பி., திட்ட தொகுப்பு அணைகளின் நீர்மட்டம் மெல்ல உயருது! பருவமழை கை கொடுப்பதால் நீர்வரத்து அதிகரிப்பு
/
பி.ஏ.பி., திட்ட தொகுப்பு அணைகளின் நீர்மட்டம் மெல்ல உயருது! பருவமழை கை கொடுப்பதால் நீர்வரத்து அதிகரிப்பு
பி.ஏ.பி., திட்ட தொகுப்பு அணைகளின் நீர்மட்டம் மெல்ல உயருது! பருவமழை கை கொடுப்பதால் நீர்வரத்து அதிகரிப்பு
பி.ஏ.பி., திட்ட தொகுப்பு அணைகளின் நீர்மட்டம் மெல்ல உயருது! பருவமழை கை கொடுப்பதால் நீர்வரத்து அதிகரிப்பு
ADDED : மே 24, 2024 10:59 PM

பொள்ளாச்சி : தொடர் மழையால், பி.ஏ.பி., திட்ட தொகுப்பு அணைகளுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளதால், நீர்மட்டம் மெல்ல உயர்ந்து வருகிறது.
பி.ஏ.பி., திட்டத்தில், மேல் நீராறு, கீழ் நீராறு, சோலையாறு, பரம்பிக்குளம், பெருவாரிப்பள்ளம், துாணக்கடவு, ஆழியாறு, திருமூர்த்தி அணைகள் உள்ளன. இந்த அணைகளில் சேகரமாகும் நீர், கேரளா மற்றும் தமிழக விவசாயம் மற்றும் குடிநீர் பயன்பாட்டுக்கு பயன்படுத்தப்படுகிறது.
சோலையாறு அணையில் இருந்து, பரம்பிக்குளம் அணைக்கு தண்ணீர் கொண்டு வரப்பட்டு, அங்கு இருந்து பெருவாரிப்பள்ளம், துாணக்கடவு வழியாக, சர்க்கார்பதி கொண்டு வரப்பட்டு, மின் உற்பத்தி செய்த பின், காண்டூர் கால்வாய் வழியாக திருமூர்த்தி அணைக்கு தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது.
திருமூர்த்தி அணையில் இருந்து, 3.77 லட்சம் ஏக்கர் நிலங்களுக்கு பாசன நீர் வழங்கப்படுகிறது. மேலும், குடிநீர் திட்டங்களுக்கும் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.
ஆழியாறு அணையில் இருந்து, புதிய மற்றும் பழைய ஆயக்கட்டு பாசனம் என, 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. மேலும், குடிநீர் திட்டங்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.
இந்நிலையில் கடந்தாண்டு பருவமழை கை கொடுக்காததால் அணைகளின் நீர்மட்டம் வெகுவாக சரிந்தது. அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் வழங்க முடியாத நிலையில், நிலை பயிர்களை காப்பாற்ற மட்டுமே தண்ணீர் வழங்கப்பட்டது. அதுவும் குறைந்த பட்சமாக வழங்கப்பட்டதால், விவசாயிகள் விலைக்கு தண்ணீர் வாங்கி பயன்படுத்தி தென்னை மரங்களை காப்பாற்றும் நிலைக்கு தள்ளப்பட்டனர்.
ஆனாலும், வறட்சியால் தென்னை மரங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. கிராமங்களில் குடிநீர் பஞ்சம் ஏற்பட்டு மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர்.
மழை பெய்ய வேண்டி, கோவில்களில் யாக பூஜை, பாரம்பரிய வழிபாடுகளை நடத்தி கிராம மக்கள் வழிபட்டனர்.
வெயிலின் தாக்கத்தால் கடும் பாதிப்பு ஏற்பட்டது. வறட்சி, வெயிலின் தாக்கம் வாட்டி வதைத்ததால், மக்கள் சிரமப்பட்டனர்.
இந்நிலையில், கடந்த இரு வாரங்களாக மழைப்பொழிவு உள்ளதால் வெயிலின் தாக்கம் குறைந்து, சீதோஷ்ண நிலையில் மாற்றம் ஏற்பட்டது. கிராமங்களில் உள்ள கிணறுகளில் நீர்வரத்து ஏற்பட்டுள்ளது. வறண்டு கிடந்த தடுப்பணைகளுக்கும் நீர் வரத்து உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
பரவலாக, தினமும் உழவு மழை பெய்ததால், விவசாய நிலங்களை உழவு செய்ய துவங்கியுள்ளனர் விவசாயிகள்.
அணைகளுக்கு நீர்வரத்து
பி.ஏ.பி., திட்ட தொகுப்பு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் தொடர் மழையால், நீர்மட்டம் மெல்ல உயர்ந்து வருகிறது. சோலையாறு அணை, ஒரே நாளில், ஆறு அடி உயர்ந்து, 24.09 அடியாக நீர்மட்டம் உள்ளது. வினாடிக்கு, 880.53 கனஅடி நீர் வரத்துள்ளது.
பரம்பிக்குளம் அணை நீர்மட்டம், 11.20 அடியாகவும், ஆழியாறு அணை நீர்மட்டம், 75 அடியாகவும் மெல்ல உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணைக்கு வினாடிக்கு, 294 கனஅடி நீர் வரத்துள்ளதால், 29.75 அடியாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது.
இந்தாண்டு மழை கை கொடுத்து அணைகள் அனைத்திலும், முழு கொள்ளளவு நிரம்பும் என, தண்ணீர் பற்றாக்குறை நீங்கும் என, விவசாயிகள் நம்பிக்கை தெரிவித்தனர்.
மழையளவு
நேற்று காலை, 8:00 மணி வரை பதிவான மழையளவு (மி.மீ.,) நிலவரம் வருமாறு:
சோலையாறு - 13, பரம்பிக்குளம் - 18, ஆழியாறு - 8.6, திருமூர்த்தி அணை - 4, வால்பாறை - 9, மேல் நீராறு - 16, கீழ் நீராறு - 18, காடம்பாறை - 7.5, சர்க்கார்பதி - 17, வேட்டைக்காரன்புதுார் - 3.4, மணக்கடவு - 4, துாணக்கடவு - 16, பெருவாரிப்பள்ளம் - 17, மேல்ஆழியாறு - 2, நவமலை - 7, பொள்ளாச்சி - 3.5, நல்லாறு - 4, என்ற அளவில் மழையளவு பதிவானது.

