/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பவானி ஆற்றில் 19 இடங்களில் குளிக்க கூடாது
/
பவானி ஆற்றில் 19 இடங்களில் குளிக்க கூடாது
ADDED : ஜூன் 09, 2025 10:22 PM

மேட்டுப்பாளையம்; மேட்டுப்பாளையத்தில் உள்ள பவானி ஆறு ஈரோடு மாவட்டம் பவானி கூடுதுறை வரை சுமார் 150 கிலோ மீட்டர் தூரம் பயணிக்கிறது. பவானி ஆற்றில் தண்ணீர் எப்போதும் செல்கிறது.
இதனால் மேட்டுப்பாளையம், சிறுமுகை உள்ளிட்ட சுற்று வட்டார பகுதி மக்கள் ஆற்றில் குளிப்பதும், துணிகளை துவைப்பதும் வழக்கமான நிகழ்வாக உள்ளது. இதுதவிர கோவை, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த இளைஞர்கள், வார விடுமுறை நாட்கள் விசேஷ நாட்களில் ஒரு நாள் சுற்றுலாவுக்காக பவானி ஆற்றில் குளித்து மகிழ வருகின்றனர். மேலும், வனபத்ரகாளியம்மன் கோவிலுக்கு வரும் பக்தர்கள் பவானி ஆற்றில் இறங்கி புனித நீராடுவது வழக்கம். இதனால், ஆற்றில் மூழ்கி உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்தது. இந்நிலையில், கடந்த 2023ம் ஆண்டு லைப் காட்ஸ் திட்டம் கொண்டு வரப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ் 7 போலீசார் பவானி ஆற்றில் தடை செய்யப்பட்ட பகுதிகளில் 24 மணி நேரமும் ரோந்து பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இதுகுறித்து லைப் கார்ட்ஸ் போலீஸ் எஸ்.ஐ., ராஜன் கூறுகையில், ''பவானி ஆற்றாங்கரையோரம் உள்ள வெள்ளிபாளையம் பாயிண்ட் 1, 2, 3, சிறுமுகை ஆலங்கொம்பு, ராமர் கோவில், அம்மன் பழத்தோட்டம், வச்சினம்பாளையம், வேடர் காலனி, ஊமப்பாளையம், கல்லாறு, துாரி பாலம், ரயில்வே கேட், எஸ்.எம்.நகர், வாட்டர் டேங்க், சமயபுரம் செக்டேம், நெல்லித்துறை, பம்ப் ஹவுஸ், குண்டுகல் துறை, விளாமரத்துார், வன பத்ரகாளியம்மன் கோவில் என 19 இடங்களில் 24 மணி நேரமும் ரோந்து மேற்கொள்கிறோம். இக்குழுவில் உள்ள போலீசார் ரோந்து வாகனத்தில் கயிறு, லைப் ஜாக்கெட் போன்ற மீட்பு உபகரணங்கள் வைத்துள்ளோம்.
இப்பகுதிகளில் ஆற்றில் யாராவது குளிக்க வந்தால், அவர்களை எச்சரிக்கை செய்து அனுப்பி விடுவோம். கடந்த மூன்று ஆண்டுகளில் 2000க்கும் மேற்பட்டோரை எச்சரிக்கை செய்து அனுப்பியுள்ளோம். எங்கள் குழு வாயிலாக இதுவரை பவானி ஆற்றில் தற்கொலைக்கு முயன்று உயிருக்கு போராடிய நிலையில் 24 பேரை உயிருடன் மீட்டுள்ளோம்,'' என்றார்.