/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பாரதி பார்க் ரோடு; பயமுறுத்துகிறது இருட்டு!
/
பாரதி பார்க் ரோடு; பயமுறுத்துகிறது இருட்டு!
ADDED : மார் 05, 2024 01:16 AM

கோவை:பாரதி பார்க் ரோட்டில், பாதிக்கும் மேற்பட்ட பகுதி, இருளாக இருப்பதால், திருட்டு மற்றும் விபத்து நடக்கும் அபாயம் அதிகரித்துள்ளது.
கோவை மாநகராட்சியின் மேற்குப்பகுதியில் அமைந்துள்ள பாரதி பார்க் ரோடு, மேட்டுப்பாளையம் ரோட்டையும், தடாகம் ரோட்டையும் இணைக்கும் முக்கிய ரோடாகவுள்ளது.
இந்த ரோட்டில், அவினாசிலிங்கம் பல்கலைக்கழகம் மற்றும் ஏராளமான குடியிருப்புகள் அமைந்துள்ளன. கடந்த ஆண்டில், இந்த ரோட்டில் பாதாள சாக்கடை மற்றும் குடிநீர்த்திட்டக்குழாய்ப் பணிகள் நடந்தன.
இதன் காரணமாக, பல மாதங்களாக படு மோசமான நிலையில் இருந்த ரோடு, சமீபத்தில் தான் சீரமைக்கப்பட்டது. ஆனால் இரவாகி விட்டால், ரோட்டின் பெரும்பாலான பகுதிகள், கடும் இருட்டாகவுள்ளன.
பகலிலேயே பக்கத்தில் வந்தால் மட்டுமே தெரியும் வேகத்தடைகள், இரவில் இருட்டில் சுத்தமாகத் தெரியாமல், வாகன ஓட்டிகள் பலரும் தடுமாறி விழுகின்றனர்.
இந்த ரோட்டையொட்டியுள்ள, குடியிருப்புப் பகுதிகளிலிருந்து வரும் வாகனங்கள், இருள் காரணமாக விபத்தைச் சந்திக்கும் அபாயமும் அதிகரித்துள்ளது.
அது மட்டுமின்றி, ரோட்டின் ஓரத்தில் இருக்கும் கால்வாய் மற்றும் குழிகளும் இருட்டில் தெரியாமல், இரு சக்கர வாகனங்களில் வருவோர், விழுந்து எழுகின்றனர். இருள் காரணமாக, திருட்டு பயமும் அதிகரித்துள்ளது. பாரதி பார்க்கை ஒட்டியுள்ள, சாய்பாபா காலனி பகுதியில் பல வீதிகளில் தெருவிளக்கு இல்லாததால், இருட்டாகத்தான் உள்ளது.
ரோட்டை நன்றாகச் சீரமைத்துள்ள மாநகராட்சி நிர்வாகம், விரைவாக வெளிச்சத்தையும் ஏற்படுத்துவது அவசியம்.

