/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மாகாளியம்மன் கோவிலில் பூக்குண்டம் இறங்கி வழிபாடு
/
மாகாளியம்மன் கோவிலில் பூக்குண்டம் இறங்கி வழிபாடு
ADDED : மார் 08, 2024 12:26 PM

ஆனைமலை;ஆனைமலை அருகே, மாகாளியம்மன கோவில் குண்டம் திருவிழாவில், விரதமிருந்த பக்தர்கள், பூக்குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.
ஆனைமலை அருகே, ஜல்லிப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட மஞ்சநாயக்கனுார் மாகாளியம்மன் கோவிலில் குண்டம் திருவிழா, கடந்த, 20ம் தேதி நோன்பு சாட்டுதல் நிகழ்சசியுடன் துவங்கியது. இதை தொடர்ந்து, தினமும் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
நேற்று முன்தினம் காலை, 9:00 மணிக்கு குண்டம் கட்டுதல், காலை, 10:00 மணிக்கு மாவிளக்கு, சிறப்பு அலங்காரம், அம்மன் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றன. பக்தர்கள் திரளாக பங்கேற்று, திருக்கல்யாண கோலத்தில் அம்மனை வழிபட்டனர்.
தொடர்ந்து, ஊஞ்சல் உற்சவம், பூவோடு எடுத்தல் நிகழ்ச்சி நடந்தது. அதில், பக்தர்கள் பூவோடு எடுத்து, கோவிலை அடைந்து அம்மனை வழிபட்டனர். மொத்தம், 30 அடி நீளம் உள்ள குண்டத்தில், இரவு குண்டம் பூ வளர்க்கப்பட்டது.
கிராம மக்கள், முக்கிய விளைபொருட்களான தேங்காயை பூக்குண்டத்தில் செலுத்தியும், மரக்கட்டைகளை எடுத்து கொடுத்தும் வழிபட்டனர். இரவு முழுவதும் குண்டம் வளர்க்கப்பட்டு, அதிகாலையில் பக்தர்கள் பூக்குண்டம் இறங்குவதற்கு தயார் செய்யப்பட்டது.
விழாவின் முக்கிய நிகழ்வாக பூக்குண்டம் இறங்குதல் நிகழ்ச்சி நேற்று நடந்தது. திருவிழா துவங்கியதில் இருந்து, கங்கணம் கட்டி, விரதம் இருந்த பக்தர்கள் பூமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தி, அம்மனை வழிபட்டனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

