/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சங்ககிரி - வெள்ளக்கோவில் சாலை வழித்தடத்தை மாற்ற பா.ஜ., மனு
/
சங்ககிரி - வெள்ளக்கோவில் சாலை வழித்தடத்தை மாற்ற பா.ஜ., மனு
சங்ககிரி - வெள்ளக்கோவில் சாலை வழித்தடத்தை மாற்ற பா.ஜ., மனு
சங்ககிரி - வெள்ளக்கோவில் சாலை வழித்தடத்தை மாற்ற பா.ஜ., மனு
ADDED : ஆக 08, 2025 10:04 AM
சென்னை: சங்ககிரி - வெள்ளக்கோவில் நான்கு வழிச்சாலைக்கான வழித்தடத்தை மாற்றி அமைக்க, தமிழக பா.ஜ., தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டம், சங்ககிரி மற்றும் திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவில் இடையே, 2,000 கோடி ரூபாய் மதிப்பீட்டில், நான்கு வழிச்சாலை அமைக்க, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் முடிவு செய்துள்ளது. இது, 72 கி.மீ., நீளம் கொண்டதாக அமையவுள்ளது.
'பாரத்மாலா யோஜனா' திட்டத்தின் கீழ் இச்சாலைக்கு, பிரதமர் மோடி, 2024ம் ஆண்டு அடிக்கல் நாட்டினார். நிலம் எடுப்பு உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தயாராகி வருகிறது. இந்த சாலை பணிக்கு ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில், நஞ்சை ஊத்துக்குளி, கருந்தேவன்பாளையம், சின்னியம்பாளையம், முத்துகவுண்டன் பாளையம், உச்சப்பாளையம், எம்.வேலம்பாளையம், ஆவரங்காட்டு வலசு, அய்யகவுண்டன் பாளையம், முத்தையாம்பாளையம், மேட்டுப்பாளையம் விஜயநகரம், உச்சிமேடு, வெள்ளக்கோவில், சேனாதிபாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது. இவற்றில் குடியிருப்புகள் மற்றும் விவசாய நிலங்கள் அடக்கம்.
இச்சாலை வழித்தடத்தை மாற்றி அமைக்க வலியுறுத்தி, மத்திய இணை அமைச்சர் முருகன், தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை, மொடக்குறிச்சி எம்.எல்.ஏ., சரஸ்வதி ஆகியோர், டில்லியில் மத்திய சாலை போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரியை நேற்று சந்தித்து, மனு அளித்துள்ளனர். சாலை வழித்தடத்தை மாற்றி அமைப்பது தொடர்பாக, மதிப்பாய்வு செய்து பதிலளிப்பதாக, நிதின் கட்கரி உறுதியளித்துள்ளார்.
இதுகுறித்து, தேசிய நெடுஞ்சாலை ஆணைய மதுரை மண்டல அதிகாரி ஒருவர் கூறியதாவது:
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே, இச்சாலை பணிக்கு திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டு உள்ளது. பணிகள் துவங்குவதற்கான ஏற்பாடு நடந்து வருகிறது. சட்டசபை தேர்தல் நேரம் என்பதால், பல்வேறு கட்சிகளும், சாலை பணியை நிறுத்த முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.
கடந்த ஜூலை மாதம், ஈரோடு எம்.பி., பிரகாஷ், தேசிய நெடுஞ்சாலை ஆணைய செயலரை சந்தித்து மனு கொடுத்தார். இப்போது, பா.ஜ., நிர்வாகிககள் மனு கொடுத்துள்ளனர். சாலை வடிவமைப்பை மாற்ற வேண்டும் என்றால், அதற்கு முதலில் இருந்து வேலையை ஆரம்பிக்க வேண்டும். திட்ட மதிப்பீட்டு தொகை, 10 சதவீதம் வரை உயர்வதற்கு வாய்ப்புள்ளது.
மாநிலத்தின் வளர்ச்சியை புரிந்து, அரசியல் கட்சிகள் ஒத்துழைப்பு வழங்கினால், விரைந்து பணிகளை முடிக்க முடியும்.
இவ்வாறு அந்த அதிகாரி கூறினார்.