/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
காணாமல் போன சிறுவனின் உடல் குளத்தில் மீட்பு
/
காணாமல் போன சிறுவனின் உடல் குளத்தில் மீட்பு
ADDED : டிச 29, 2025 05:46 AM

பாலக்காடு: பாலக்காடு அருகே, காணாமல் போன ஆறு வயது சிறுவனின் உடல் குளத்தில் இருந்து மீட்கப்பட்டது.
கேரளா மாநிலம், பாலக்காடு மாவட்டம் சித்தூர் அம்பாட்டுபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் முகமது அனஸ். இவரது மனைவி தவ்ஹிதா. இவர்களுக்கு ரயான், சுஹான் 6. ஆகிய இரு குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில், நேற்று முன்தினம் மதியம், 12:00 மணி அளவில் ரயானுடன் வீட்டினுள் விளையாடிக் கொண்டிருந்த சுஹான் வெளியே இறங்கி சென்றார். பிறகு நீண்ட நேரமாகியும் திரும்பி வராததால், அச்சமடைந்த உறவினர்கள் தேடத்துவங்கினர்.
தகவல் அறிந்து மோப்பநாய் உடன் சித்தூர் போலீசாரும், பகுதியில் தேடுதல் நடத்தினர். வீட்டின் அருகில் இருந்து சென்ற மோப்ப நாய், அப்பகுதியில் உள்ள குளக்கரைக்கு போய் நின்றது.
தொடர்ந்து குளத்தில் தீயணைப்பு படையினரும், ஊர் மக்களும் சேர்ந்து மாலை வரை தேடுதல் நடத்தினர். ஆனால் குழந்தையை கண்டுபிடிக்க முடியவில்லை.
இதையடுத்து, நேற்று காலை மீண்டும் பகுதியில் உள்ள ஐந்து குளங்கள் மையமாகக் கொண்டு நடத்திய தேடுதலில், வீட்டின் 300 மீட்டர் தொலைவில் உள்ள குளத்தில் இருந்து சிறுவனின் உடல் மீட்கப்பட்டது. பாலக்காடு மாவட்ட அரசு மருத்துவமனையில் நடந்த பிரேத பரிசோதனைக்கு பிறகு உடலை உறவினர்களிடம் ஒப்படைத்தனர்.
சம்பவம் தொடர்பாக, போலீசார் விரிவான விசாரணை நடத்த வேண்டும் என்று சித்தூர் நகராட்சித்தலைவர் சுமேஷ் அச்சுதன் தெரிவித்தார்.
அதே நேரத்தில் பிரேத பரிசோதனை அறிக்கையில், குழந்தை நீரில் மூழ்கி இறந்ததாகக் கூறப்பட்டுள்ளது என்றும், மேலும் குழந்தையின் உடலில் சந்தேகத்திற்கிடமான காயங்கள் எதுவும் இல்லை என்றும், சம்பவம் குறித்து விசாரிக்கும் போலீசார் தெரிவித்தனர்.

