/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கதையாகி விடக்கூடாது குண்டு மிரட்டல்; திசைதிருப்பும் திட்டமா; போலீசார் உஷார்!
/
கதையாகி விடக்கூடாது குண்டு மிரட்டல்; திசைதிருப்பும் திட்டமா; போலீசார் உஷார்!
கதையாகி விடக்கூடாது குண்டு மிரட்டல்; திசைதிருப்பும் திட்டமா; போலீசார் உஷார்!
கதையாகி விடக்கூடாது குண்டு மிரட்டல்; திசைதிருப்பும் திட்டமா; போலீசார் உஷார்!
ADDED : அக் 14, 2024 11:39 PM

கோவை : கோவையில் உள்ள நான்கு தனியார் பள்ளிகளுக்கு, மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பெற்றோர், மாணவர்கள், போலீசாருக்கு தொடர்ந்து பதைபதைப்பை ஏற்படுத்தி வரும் இப்புகார்களை அலட்சியம் செய்யாமல், போலீசார் 'அலர்ட்' ஆக இருக்க வேண்டுமென, விரும்புகின்றனர் பெற்றோர்.
கோவையில் கடந்த சில மாதங்களாகவே தனியார் பள்ளிகளுக்கு, நட்சத்திர ஓட்டல்களுக்கு வெடிகுண்டு மிரட்டல், இ- மெயில் வாயிலாக வந்து கொண்டிருக்கிறது. போலீசார் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் சம்பந்தப்பட்ட இடத்திற்கு சென்று, சோதனை நடத்திய பின், அது புரளி என தெரிய வருகிறது.
மீண்டும் மிரட்டல்
இதுபோன்று வரும் மெயில்களை, அனுப்புவது யார் என்பது குறித்து சைபர் கிரைம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ஆனால் இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இந்நிலையில் நேற்று மீண்டும், கோவையில் உள்ள நான்கு பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது.
கோவை வேலாண்டிபாளையத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளிக்கும், சரவணம்பட்டியில் உள்ள தனியார் பள்ளிக்கும், தொண்டாமுத்துார் பகுதியில் உள்ள தனியார் பள்ளிக்கும், அவிநாசி ரோட்டில் உள்ள தனியார் பள்ளிக்கும் என, மாநகர் மற்றும் புறநகரில் உள்ள நான்கு பள்ளிகளுக்கு இ-மெயில் வாயிலாக, வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது.
இடைத்தொடர்ந்து போலீசார் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் வழக்கம்போல மிரட்டல் வந்த பள்ளிகளுக்கு விரைந்து சென்று, சோதனை மேற்கொண்டனர்.
தீவிர சோதனையில் வெடிகுண்டு எதுவும் கைப்பற்றப்படவில்லை. இதுவும் புரளி என்பது தெரியவந்தது. வெடி குண்டு மிரட்டல் குறித்து தகவல் அறிந்து வந்த, மாணவர்களின் பெற்றோர் பள்ளி முன் திரண்டனர். மிரட்டல் வெறும் வதந்தி என அறிந்து, கலைந்து சென்றனர். சில பள்ளிகளில், தங்கள் பிள்ளைகளை பெற்றோர் வீடுகளுக்கு அழைத்து சென்றனர். பள்ளிகளுக்கு தொடரும் வெடிகுண்டு மிரட்டலால், பெற்றோர் அச்சம் அடைந்து வருகின்றனர்.
அலட்சியம் வேண்டாம்
கடந்த சில நாட்களாக வரும் மிரட்டல்களை, 'புலி வருது... புலி வருது' கதையாக, போலீசார் சாதாரணமாக எடுத்துக்கொள்ளக்கூடாது. மிரட்டல் விடுப்பவர் எவராக இருந்தாலும், கண்டுபிடித்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதே வேளையில், போலீசாரின் கவனத்தை திசை திருப்பும் செயலாகவும், இந்த தொடர் மிரட்டல்கள் இருக்கலாம் என்பதால், ஒட்டுமொத்த நகரின் பாதுகாப்பில் போலீசாரும், உளவுத்துறையினரும், உஷாராக இருக்க வேண்டும்.