UPDATED : அக் 26, 2026 05:47 PM
ADDED : அக் 26, 2026 05:44 PM

அன்னுார்: பத்திரப்பதிவு மையங்களை, தனியார் வாயிலாக துவக்கும் முயற்சியை கண்டித்து, பத்திர எழுத்தர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
பதிவுத்துறை சார்பில், தமிழகத்தில், கோவை வடக்கு உட்பட ஐந்து இடங்களில், தனியார் வாயிலாக நவீன பத்திரப்பதிவு மையம் அமைக்கவும், இரண்டாம் கட்டத்தில், 20 இடங்களில் அமைக்கவும், டெண்டர் கோரப்பட்டுள்ளது. ‘ஊழியர்கள், பத்திர எழுத்தர்கள் மற்றும் கணினி ஆபரேட்டர்கள், வேலை இழக்கும் அபாயம் உள்ளது. எனவே, இதை கைவிட வேண்டும்’ என வலியுறுத்தி, தமிழ்நாடு பத்திரம் நகல் எழுதுவோர் சங்கம் சார்பில், நேற்று, அன்னுார் சார் பதிவாளர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
பத்திர நகல் எழுதுவோர் வாழ்வாதாரத்தை காப்பாற்ற வேண்டும் என வலியுறுத்தி கோஷம் எழுப்பப்பட்டது. நிர்வாகிகள் பேசுகையில், ‘முதற்கட்டமாக கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. அடுத்து பத்திரப்பதிவை புறக்கணிக்கும் போராட்டம் நடக்கவுள்ளது. முதல்வருக்கும், பதிவுத்துறை அமைச்சருக்கும், கோரிக்கை குறித்து மனு அனுப்பப்படுகிறது’ என்றனர்.
* மேட்டுப்பாளையம் சார் பதிவாளர் அலுவலகம் முன், பத்திரம் நகல் எழுதுவோர் சங்கத்தினர், கோரிக்கை அட்டை அணிந்து ஆர்ப்பாட்டம் செய்தனர்.
மேட்டுப்பாளையம் சங்கத் தலைவர் ராஜேந்திரன், பத்திர எழுத்தர் விஜயராகவன், சரவணன், பாபு உட்பட திரளான பத்திர எழுத்தர்கள் பங்கேற்றனர்.
