/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மலையெங்கும் மது பாட்டில்! வனவிலங்குகளுக்கு அச்சுறுத்தல்; நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்...
/
மலையெங்கும் மது பாட்டில்! வனவிலங்குகளுக்கு அச்சுறுத்தல்; நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்...
மலையெங்கும் மது பாட்டில்! வனவிலங்குகளுக்கு அச்சுறுத்தல்; நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்...
மலையெங்கும் மது பாட்டில்! வனவிலங்குகளுக்கு அச்சுறுத்தல்; நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்...
ADDED : அக் 08, 2024 11:52 PM

பெ.நா.பாளையம் : பெரியநாயக்கன்பாளையம் அருகே பாலமலையில் மலை கிராமங்களில் மது பாட்டில்கள் குவியல், குவியலாக காணப்படுகின்றன. இவை வனவிலங்குகளுக்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளது. இதை கட்டுப்படுத்த வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, இயற்கை ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.
கோவை வடக்கில், பெரியநாயக்கன்பாளையம் அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் பாலமலை உள்ளது. அடிவாரத்திலிருந்து சுமார்,7 கி.மீ., தூரத்தில் பாலமலை ரங்கநாதர் கோவில் உள்ளது.
கோவில் அருகே பெரும்பதி, பெருக்கைபதி, பெருக்கைபதிப்புதுார், குஞ்சூர்பதி, மாங்குழி, பசுமணி உள்ளிட்ட மலை கிராமங்கள் உள்ளன. இப்பகுதியில் காட்டுமாடு, யானை, சிறுத்தை, காட்டுபன்றி உள்ளிட்ட வனவிலங்குகளின் நடமாட்டம் உண்டு. இதனால் இரவு நேரங்களில் பாலமலை மலைப்பாதையில் வாகனங்களில் செல்வதை தவிர்க்கும்படி, பெரியநாயக்கன்பாளையம் வனத்துறையினர் பொதுமக்களையும், பக்தர்களையும் கேட்டுக் கொண்டுள்ளனர்.
இது குறித்து, இயற்கை ஆர்வலர்கள் கூறுகையில், ''ராமானுஜர் வருகை தந்த பாலமலை ரங்கநாதர் கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
ஆனால், பக்தர்களின் போர்வையில் சமூக விரோதிகளும் பாலமலை நோக்கி வர துவங்கியுள்ளனர். இரவு நேரங்களில் நான்கு சக்கர வாகனங்களில் வரும் 'குடி'மகன்கள் கோவிலை சுற்றி உள்ள மரங்களுக்கு கீழ் அமர்ந்து மது அருந்திவிட்டு, அதே பகுதியில் மது பாட்டில்களை வீசி எறிந்து விட்டு செல்கின்றனர்.
இன்னும் சிலர் காட்டு பகுதிகளுக்கும், மலைவாழ் மக்கள் வசிக்கும் கிராமங்களுக்கும் சென்று மது அருந்திவிட்டு பாட்டில்களை வீசிவிட்டு செல்கின்றனர். உடைந்த மது பாட்டில்களால் யானைகள் உள்ளிட்ட வன விலங்குகளின் கால்கள் சேதமாகி, உயிரிழக்கும் வாய்ப்புகள் உள்ளன.
பெரியநாயக்கன்பாளையம் வனச்சரகத்துக்கு உட்பட்ட பாலமலை மலையடிவாரத்தில் சோதனை சாவடி உள்ளது. ஆனால், அங்கு வனத்துறை ஊழியர்கள் யாரும் பணியில் இருப்பதில்லை. இதனால் பாலமலை வட்டாரத்தில் வனப்பகுதிக்குள் அத்துமீறி நுழைந்து, சமூக விரோத செயல்களில் ஈடுபடும் நபர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
பிரச்னைக்கு தீர்வு காண வனத்துறையினர் கடும் நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும்'' என்றார்.