/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மூன்று வார்டுகள் சந்திக்கும் இடத்தில் எல்லை பிரச்னை
/
மூன்று வார்டுகள் சந்திக்கும் இடத்தில் எல்லை பிரச்னை
மூன்று வார்டுகள் சந்திக்கும் இடத்தில் எல்லை பிரச்னை
மூன்று வார்டுகள் சந்திக்கும் இடத்தில் எல்லை பிரச்னை
ADDED : ஆக 31, 2025 11:35 PM

மா நகராட்சி வடக்கு மண்டலம், 19வது வார்டு மணியகாரம்பாளையம் அருகே ஸ்ரீதேவி நகர், தங்கம்மாள் நகர், செந்தில் வேலவன் நகர், அசோக் நகர், பாலமுருகன் நகர் மேற்கு பகுதி, கல்பனா லே-அவுட் உள்ளிட்ட இடங்களில், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர்.
இங்குள்ள கணேஷ் லே-அவுட் பகுதி, 19, 30 மற்றும், 31வது வார்டுகளுக்கு எல்லையாக அமைந்துள்ளது. பாலமுருகன் நகரின் மேற்கு பகுதியில், ராஜிவ்காந்தி சாலை செல்லும் வளைவில்(19வது வார்டு) மற்ற வார்டு பகுதிகளில் இருந்தும் குப்பை கொட்டப்படுவது, வார்டு எல்லை பிரச்னையாக மாறியுள்ளது.
தவிர, கணேஷ் லே-அவுட்டில் இருந்து ஒத்த புளியமரம் செல்லும் ரோட்டையொட்டிய கால்வாயில் குடியிருப்பு, ஒர்க் ஷாப் கடந்து செல்ல, கான்கிரீட் பாலம் மிகவும் தாழ்வாக இருக்கிறது. மழை காலங்களில் அடைப்பு ஏற்பட்டு, ரோட்டில் கழிவுநீர் பெருக்கெடுத்து, வாகன ஓட்டிகளை திணறடிக்கிறது.
ஓராண்டாச்சு! முருகானந்தம் (மளிகை வியாபாரி): ஸ்ரீதேவி நகரில் ஓராண்டுக்கு முன், சாக்கடை இடிக்கப்பட்டது. இதுவரை சரி செய்யாததால், வாகன ஓட்டிகளுக்கு விபத்து அபாயம் உள்ளது; கொசு தொல்லையும் அதிகரித்துள்ளது. சாக்கடை திறந்தவெளியில் இருப்பதால், காலை, மாலை நேரங்களில் போக்குவரத்து நெரிசல் பிரச்னையும் ஏற்படுகிறது.
பராமரிப்பு குறைவு மஞ்சு (இல்லத்தரசி): தங்கம்மாள் நகர் முதல் வீதியில் உள்ள ரிசர்வ் சைட் இடம், பராமரிப்பின்றி உள்ளது. நாங்களே சுத்தம் செய்து பராமரித்து வருகிறோம். இரவு நேரங்களில் பாம்புகளால் பயத்தில் உள்ளோம். இந்த இடத்தை சுற்றிலும் காம்பவுண்ட் சுவர் கட்டித்தர வேண்டும். யோகா மையமும் அமைத்துக்கொடுத்தால், இங்குள்ளவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
குப்பை பிரச்னை வேலுமணி: செந்தில் வேலவன் நகர், அசோக் நகர், தங்கம்மாள் நகர் உள்ளிட்ட இடங்களில் பூங்கா அமைக்க ஒதுக்கப்பட்ட இடங்கள் பராமரிப்பின்றி உள்ளது. இப்பகுதியில் சாக்கடை வசதி இல்லை. கழிவுநீரால் துர்நாற்றம் வீசுகிறது. குப்பையும் சரிவர அள்ளப்படுவதில்லை. உப்பு தண்ணீர் குழாயும் ரோடு பணிகளின்போது உடைக்கப்பட்டது. அதன்பிறகு பல மாதங்களாக சரி செய்யப்படவில்லை.
ஆக்கிரமிப்பு கவுசல்யா தேவி: தங்கம்மாள் நகர் மின்வாரிய அலுவலகம் அருகே தார் ரோடு இல்லை. மேற்கு, கிழக்கு, 5, 6வது 'கட்'களில் முழுவதும் ரோடு போடவில்லை. மழை காலங்களில் சிரமத்தை சந்திக்கிறோம். மாநகராட்சி அதிகாரிகளும் வருவதில்லை. சாக்கடை எடுப்பதில்லை. அம்மா உணவகம் முதல் ஓடைகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. அதை அகற்ற வேண்டும்.
ரோட்டின் நடுவே பள்ளம் ஏற்பட்டபோது விபத்து ஏற்படுவதை தவிர்க்க, எங்கள் சொந்த செலவில் 'கான்கிரீட்' போட்டுள்ளோம். குடிநீர் சில சமயங்களில், 20 நாட்களுக்கு ஒருமுறை வருகிறது. ஒத்த புளியமரம் ரோட்டில் இரவு நேரங்களில் இருள் சூழ்ந்து இருப்பதால் மக்கள் பயப்படுகின்றனர். அங்கு தெரு விளக்கு வேண்டும். இப்பகுதியில் திருட்டு, செயின் பறிப்பு சம்பவங்கள் நடக்கின்றன. எனவே, 50 கேமராக்களை எங்கள் சொந்த செலவில் பொருத்தியுள்ளோம். - செல்வக்குமார் செயலாளர், தங்கம்மாள் நகர் குடியிருப்போர் நலச்சங்கம்
'பிரச்னைகளுக்கு
தீர்வு காணப்படுகின்றன'
n மணியகாரம்பாளையம் மாநகராட்சி பள்ளியில், கூடுதல் வகுப்பறைகள் இல்லாததால் மாணவர்கள் சிரமப்பட்டனர். இதனால் இரு கட்டடங்கள் கூடுதலாக கட்டப்பட்டுள்ளன. இயற்பியல், வேதியியல், உயிரியல் ஆய்வகங்கள் புதிதாக திறக்கப்பட்டுள்ளன. 'ஸ்மார்ட்' வகுப்பறை மாணவர்களுக்கு வரப்பிரசாதமாக உள்ளது. n யாழ் நுாலகம் அருகே நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் கட்டப்பட்டதால், ஏழை, எளிய மக்கள் மருத்துவ சிகிச்சை பெற்று வருகின்றனர். பத்திரப்பதிவு அலுவலகம் அருகே நகர்ப்புற நலவாழ்வு மையமும் திறக்கப்பட்டுள்ளது. இது, மருத்துவ வசதிகள் பெற எளிதாக அமைந்துள்ளது. n அத்திபாளையம் ரோடு, தண்ணீர் தொட்டி அருகே இருந்து மணியகாரம்பாளையம் செல்லும் ரோடு மிகவும் மோசமாக இருந்தது. பல லட்சம் ரூபாய் செலவில் ரோடு புனரமைக்கப்பட்டதால், வாகன ஓட்டிகள் நிம்மதி அடைந்துள்ளனர். தற்போது, யு.ஜி.டி., பணிகளுக்காக தோண்டப்பட்டுள்ளது. n கல்பனா லே-அவுட்டில், 40 ஆண்டுகளுக்கு மேலாக சாக்கடை வசதி இல்லை. அதேபோல், எம்.கே.பி., காலனியிலும் சாக்கடை வசதி இல்லாததால், மக்கள் சிரமங்களை சந்தித்தனர். தற்போது அங்கு சாக்கடை வசதி ஏற்படுத்தப்பட்டு, பிரச்னைகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளதாக, கவுன்சிலர் கல்பனா தெரிவித்தார்.