UPDATED : ஆக 05, 2026 07:34 PM
ADDED : ஆக 05, 2026 06:52 PM
த.வெ.க.அரசின் முதல் பட்ஜெட் சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது. இது குறித்து கோவை மக்கள் கருத்துக்களை பகிர்ந்தனர்.
போதை இல்லா தமிழகம் பள்ளி மாணவர்கள் மத்தியில் போதைப்பொருள் நுகர்வை தடுப்பது மிக முக்கியமான விஷயம். இவர்கள் நீண்டநாட்கள் இப்பழக்கத்திற்கு ஆட்படும் போது, எதிர்கால தமிழகமே கேள்விக்குறியாகும் நிலை ஏற்படலாம். இதற்காக பட்ஜெட்டில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கென பிரத்யேக செயலி உருவாக்கியதன் மூலம், யார் வேண்டுமானாலும், புகார் அளிக்க முடியும் என்பதை வரவேற்கிறோம்.
- ராஜா, கார்ப்பரேஷன் ஊழியர், உக்கடம்
சுய தொழில் வளர்ச்சி தனியாக இருக்கும் பெண்களுக்கு, ஆடு, மாடு வளர்ப்பதற்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. தனி மனுஷியாக ஒருவரால் இவற்றை சமாளிப்பது கஷ்டமாக இருந்தால், பொருளாதார தேவையை பூர்த்தி செய்து கொள்ள உதவியாக இருக்கும். தங்கத்துடன் பட்டுப்புடவை தருவதாக அரசு அறிவித்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. - கிருஷ்ணவேணி, இல்லத்தரசி, உக்கடம்
மின்சார கட்டணமே இல்லை பழைய அரசு 100 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கியது. ஆனால் தற்போது 200 யூனிட் கிடைப்பதால், எங்களுக்கு இரண்டு மாதமாக கட்டணமே இல்லை. எங்களை போன்ற ஏழை மக்களுக்கு, மின் கட்டணத்தில் இருந்து விடுதலை கிடைத்துள்ளது. என்னை போன்ற முதியவர்களை தேடி வந்து சிகிச்சை அளிக்க மையம் துவங்கப்படுவதாக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. மனதார வரவேற்கிறேன். - சிவசாமி, போத்தனுார்
அனைத்து தரப்புக்கும் வாய்ப்பு தமிழக பட்ஜெட் அ.தி.மு.க., தி.மு.க., ஆட்சியில் இருந்தபோது தாக்கல் செய்ததை காட்டிலும் சிறப்பாக வழங்கியுள்ளது புதிதாக பொறுப்பேற்ற தமிழக அரசு. குழந்தைகள், கர்ப்பிணிகள், தாய்மார்கள், இளைஞர்கள், விவசாயிகள், இளம்பெண்கள், வயோதிகர்கள் என்று அனைத்து தரப்பினருக்கும் ஏற்ற சிறந்த பட்ஜெட் ஆக அமைந்துள்ளது. -லக் ஷனா சிவானி பாலாஜி, சத்தி ரோடு.
வயோதிகர்களுக்கு வரப்பிரசாதம் 60 வயது கடந்த வயோதிகர்களுக்கு ஓய்வு இல்லங்களை அமைப்பதாகவும், மேம்பட்ட வசதிகள் செய்து கொடுப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளதை வரவேற்கிறோம். ஆன்மிக சுற்றுலா, அரசுப்பணியாளர்களுக்கு புதிய மருத்துவ காப்பீட்டு திட்டம், ஏழை மக்களுக்கான வெற்றி வீடு கட்டும் திட்டம் என்று ஏராளமான திட்டங்களை அறிவித்துள்ளதை வரவேற்கிறோம். -ஜோதிமணி, இல்லத்தரசி, சரவணம்பட்டி
மாணவர் நலனுக்கு முக்கியத்துவம் திருமணத்துக்கு 8 கிராம் தங்கம் மற்றும் பட்டுப்புடவை, குழந்தைக்கு 1 கிராம் மோதிரம் அறிவிப்புகள் ஏழை மக்களுக்கு பலனளிக்கும். மாணவர் நலனுக்கு முக்கியத்துவம் கொடுத்திருப்பதும் வரவேற்கத்தக்கது. இலவச பஸ் பயணம், பைக் டாக்ஸி ஆகியவற்றால் ஆட்டோ ஓட்டுநர்கள் பாதிக்கப்பட்டுள்ளோம். எங்களுக்கு பலனளிக்கும் வகையிலான திட்டம் இல்லாதது ஏமாற்றமளிக்கிறது. -ரவிச்சந்திரன் ஆட்டோ டிரைவர், வெள்ளலுார்
கிராமிய விளையாட்டுகளை மீட்க வேண்டும் கிராமிய விளையாட்டு போட்டிகளுக்கு ரூ.42 கோடி ஒதுக்கி இருப்பது வரவேற்கக்கூடிய விஷயம். முதலில் கிராமங்கள் தோறும் மைதானங்கள் அமைக்க நடவடிக்கை எடுத்த பிறகு இந்த தொகையை கொடுத்தால் விளையாட்டு வீரர்கள் பயன் அடைவர். அழிந்து வரும் சில கிராமிய விளையாட்டுகளை மீட்க, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். --பிரபு, கூடைப்பந்து பயிற்சியாளர், டவுன்ஹால்
நல்வழிக்கு கொண்டு செல்லும் 10 ஒலிம்பிக் சிறப்பு மையங்கள் நிறுவ ரூ.50 கோடி, 8-18 வயதுக்குட்பட்ட பள்ளி மாணவர்களை தேர்வு செய்து உலகத்தரம் வாய்ந்த பயிற்சி வழங்க ரூ.5 கோடி, 500 வீரர்களுக்கு நிதியுதவி வழங்க கூடுதலாக ரூ.22 கோடி, கிராமிய விளையாட்டுக்கு ரூ.42 கோடி ஒதுக்கப்படுகிறது. இந்நடவடிக்கை போதை என்ற தவறான வழியில் இருந்து ஆரோக்கியம் என்ற நல்வழிக்கு இளைஞர்களை அழைத்து செல்லும். -கண்ணன், கபடி வீரர், கள்ளிமடை.
புதிய திட்டங்கள் இல்லை புதிய திட்டங்கள் எதுவும் இல்லை. கடந்த ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட திட்டங்களுக்கு மெருகேற்றி, ஸ்டிக்கர் ஒட்டி அறிவித்துள்ளனர். தேர்தல் அறிக்கையில் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுவார்கள் என்று எதிர்பார்த்த மக்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியுள்ளது. புதிய திட்டங்களும் இல்லை, மக்களின் எதிர்பார்ப்புகளுக்கு உரிய பதிலும் இல்லை. --சதீஷ், வக்கீல் கோவை
எதிர்பார்ப்பும், நம்பிக்கையும் ஆன்மிக பயணிகளின் வசதிக்காக ஓய்வு இல்லங்கள் அமைப்பது, புனிதப் பயணத்திற்கு நிதி ஒதுக்குவது ஆகியவை வரவேற்கத்தக்கவை. அதேபோல், மாணவர்களின் நலனுக்கான கல்வி சார்ந்த அறிவிப்புகளும் சிறப்பாக உள்ளன. கடந்த ஆட்சியைப் போல வெறும் அறிவிப்புகளோடு நின்று விடாமல், இத்திட்டங்கள் அனைத்தும் முறையாகச் செயல்படுத்தப்படும் என்ற எதிர்பார்ப்பும், நம்பிக்கையும் இருக்கிறது. - பாலன் ஆட்டோ டிரைவர், ராம்நகர்.
கல்விக்கு கூடுதல் முக்கியத்துவம் பள்ளிக்கல்வி, உயர்கல்வி, திறன் மேம்பாடு மற்றும் இளைஞர் நலன் ஆகிய துறைகளுக்கு கணிசமான நிதி ஒதுக்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது. ஒதுக்கப்பட்ட நிதி மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு நேரடியாக பயன் அளிக்கும் வகையில் சரியாக செயல்படுத்த வேண்டும். அப்போது கல்வியின் தரம் மேலும் உயரும். - செந்தில்குமார் பேராசிரியர், குனியமுத்துார்
உரிமைத்தொகை கிடைக்காதா த.வெ.க. ஆட்சிக்கு வருவதற்கு முன், மகளிர் உரிமைத்தொகையை அதிகரிப்பதோடு, ஆண்டுக்கு ஆறு சிலிண்டர் தருவதாக வாக்குறுதி அளிக்கப்பட்டது. பட்ஜெட்டில் நிதி ஒதுக்காததால் கவலை தருகிறது. தாய்மாமன் சீர் திட்டம் மூலம், குழந்தைக்கு ஒரு கிராம் தங்க மோதிரம் தருவது வரவேற்கத்தக்கது. நீட் விவகாரத்தில் திராவிட கட்சிகள் செய்த தவறை இந்த அரசும் செய்யக்கூடாது. மாணவர்களுக்கு நம்பிக்கையை கொடுத்துவிட்டு, பின் போட்டித்தேர்வு எழுதும் நடைமுறை தொடராமல் இருக்க, உறுதியாக மத்திய அரசிடம் பேச வேண்டும். - தனலட்சுமி இல்லத்தரசி, தாமஸ் வீதி.
