/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தோலம்பாளையம் மேம்பாலம் கட்டியும் பயனில்லை
/
தோலம்பாளையம் மேம்பாலம் கட்டியும் பயனில்லை
ADDED : அக் 17, 2025 11:33 PM

மேட்டுப்பாளையம்: தோலம்பாளையம் ரயில்வே மேம்பாலம் பணிகள் முடிந்தன. ஆனால் மேட்டுப்பாளையம் சாலையிலும், தோலம்பாளையம் சாலையிலும், இன்னும் ரவுண்டானா அமைக்கவில்லை. இதனால் பாலம் கட்டி முடித்தும், மக்களுக்கு பயன் இல்லாமல் உள்ளது.
காரமடை நகரில், கோவை, மேட்டுப்பாளையம், தோலம்பாளையம், கன்னார்பாளையம் ஆகிய முக்கிய நான்கு சாலைகள், மிகவும் குறுகலாக உள்ளன. இந்த சாலைகளில், அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.
போக்குவரத்து நெரிசல் சீரடைய நீண்ட நேரம் ஆவதால், காரமடை நகர் மக்கள், பயணிகள் ஆகியோர் மிகவும் அவதிப்படுகின்றனர். போக்குவரத்து நெரிசலால், கோவை செல்லும் கல்லூரி மாணவ, மாணவியர், அரசு மற்றும் தனியார் அலுவலகங்களுக்கு வேலைக்கு செல்லும் பணியாளர்கள், குறிப்பிட்ட நேரத்திற்கு செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது. இந்த போக்குவரத்து நெரிசலை குறைக்க, காரமடை - தோலம்பாளையம் ரயில்வே மேம்பாலம் கட்ட, தமிழக அரசு முடிவு செய்தது. இதற்காக, 28.93 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்தது. மேட்டுப்பாளையம் -காரமடை சாலையில், காரமடை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே துவங்கி, மேட்டுப்பாளையம் ரயில் பாதையை கடந்து, தோலம்பாளையம் சாலையில் சென்றடையும் வகையில், மேம்பாலம் கட்டும் பணியானது நடைபெற்று வருகின்றன.
மேம்பாலம் கட்டும் பணிகள் துவங்கி, மூன்று ஆண்டுகள் ஆன நிலையில், தற்போது பாலம் கட்டி முடித்து உள்ளனர். ஆனால் இன்னும் மேட்டுப்பாளையம் சாலையிலும் தோலம்பாளையம் சாலையிலும் ரவுண்டான அமைக்கவில்லை. இதனால் பாலம் கட்டியும் பொது மக்களுக்கு பயனில்லாத நிலையில் உள்ளது.
இது குறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் (பாலம் கட்டும் பிரிவு) கூறியதாவது:
காரமடை தோளம்பாளையம் மேம்பாலம் கட்டும் பணிகள் முடிந்துள்ளன. பக்கவாட்டில் சாலையும் போடப்பட்டுள்ளன. மேட்டுப்பாளையம் சாலை, காரமடை - தோலம்பாளையம் சாலை ஆகிய இரண்டு சாலைகளில் முக்கோண வடிவிலான ரவுண்டான அமைக்கப்படும்.
இதற்கு தற்போது டெல்லியில் உள்ள மத்திய நெடுஞ்சாலைத்துறை நிர்வாகத்திடம் இருந்து, அனுமதி கிடைத்துள்ளது. தீபாவளி முடிந்த பின்பு டெண்டர் வைத்து பின், ரவுண்டான அமைக்கப்படும்.
இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.