/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
லக்கேஜ்க்கு டிக்கெட் எடுக்காத பெண்ணை நடுவழியில் இறக்கி விட்ட பஸ் கண்டக்டர்
/
லக்கேஜ்க்கு டிக்கெட் எடுக்காத பெண்ணை நடுவழியில் இறக்கி விட்ட பஸ் கண்டக்டர்
லக்கேஜ்க்கு டிக்கெட் எடுக்காத பெண்ணை நடுவழியில் இறக்கி விட்ட பஸ் கண்டக்டர்
லக்கேஜ்க்கு டிக்கெட் எடுக்காத பெண்ணை நடுவழியில் இறக்கி விட்ட பஸ் கண்டக்டர்
ADDED : ஜன 14, 2025 06:41 AM

கோவை; திருச்சி மாவட்டம் கல்லணையை சேர்ந்தவர் சர்மிளா, 52. கோவை துடியலூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊரான திருச்சிக்கு செல்ல, கோவை மாவட்டம் சூலூரில் அரசு பஸ்ஸில் ஏறினார்.
பஸ்ஸில் அவரது உடமைகளுக்கு, லக்கேஜ் கட்டணம் கேட்டதற்கு கொடுக்க மறுத்ததால், பெண்ணை வழியிலேயே இறக்கி விட்டதால், பரபரப்பு ஏற்பட்டது.
சர்மிளா கூறியதாவது:
நான் டிராவல் பேக்கில் துணிகளும், ஒரு கட்டைப்பையில், பழைய மிக்ஸியும், தின்பண்டங்களும் வைத்திருந்தேன். பஸ்சில் ஏறியவுடன் கண்டக்டர் டிக்கெட் கட்டணம், ரூ.160, பைகளுக்கு லக்கேஜ் கட்டணம் ரூ.500 கேட்டார்.
இதற்கு மறுப்பு தெரிவித்ததால், என்னை பல்லடத்தில் இறக்கி விட்டார். அதற்கு பயணக்கட்டணம், லக்கேஜ் கட்டணம் வசூலித்தார்; டிக்கெட் தரவில்லை.
அடுத்து வந்த அரசு பஸ்சில் ஏறி, திருச்சிக்கு டிக்கெட்எடுத்தேன். வெள்ளக்கோவில் அருகே, சாலையோர உணவகத்தில் பஸ் நிறுத்தப்பட்டது. அப்போது என்னை இறக்கிவிட்ட பஸ் கண்டக்டரும், நான் இரண்டாவதாக பயணித்த பஸ்சின் கண்டக்டரும் அங்கு சந்தித்தனர். தங்களுக்குள் ஏதோ பேசிக் கொண்டனர்.
பஸ் புறப்பட்டதும், கண்டக்டர் லக்கேஜ் எடுக்க வலியுறுத்தினார். டிக்கெட் கேட்டதற்கு தர மறுத்து விட்டார். தொடர்ந்து, வெள்ளக்கோவில் அருகே பஸ் ஸ்டாப் இல்லாத இடத்தில், நடுவழியில் இறக்கி விட்டார்.
கண்ணீருடன் நின்று கொண்டிருந்தேன்.அவ்வழியாக வந்த காரில் ஏறி, பஸ்சை முந்திச்சென்று வழிமறித்தோம். நாங்கள் கேட்ட கேள்விகளுக்கு கண்டக்டர், டிரைவர் இருவரும் பதில் அளிக்கவில்லை. பெண் என்றும் பாராமல் நடுவழியில் என்னை இறக்கி விட்டகண்டக்டர், டிரைவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, அவர் கூறினார்.
அரசு போக்குவரத்து கழக கோவை மண்டல பொதுமேலாளர்(பொறுப்பு) செல்வகுமார் கூறுகையில், ''அந்த பெண் தனது பையில், மினி கிரைண்டர் வைத்திருந்தார். அதற்காகவே லக்கேஜ் டிக்கெட் எடுக்க அறிவுறுத்தப்பட்டது.
''அப்பெண் வேண்டும் என்றே பிரச்னை செய்துள்ளார். அவரை பஸ் ஸ்டாப்பில் தான் இறக்கி விட்டுள்ளனர்,'' என்றார்.
லக்கேஜ் கட்டணம் வசூலித்தால், அதற்குரிய டிக்கெட் தருவது அவசியம். ஆனால், டிக்கெட் தரவில்லை என கூறப்படுகிறது. எதுவாக இருந்தாலும், ஒரு பெண்ணை நடுவழியில் இறக்கி விட்டது, எந்த விதத்தில் நியாயம் என்ற கேள்வி, பல்வேறு தரப்பிலும் எழுப்பப்படுகிறது.