/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
உக்கடத்தில் 2 இடங்களில் அமைகிறது பஸ் ஸ்டாண்ட்; ரூ.21.55 கோடிக்கு டெண்டர் கோரியது மாநகராட்சி
/
உக்கடத்தில் 2 இடங்களில் அமைகிறது பஸ் ஸ்டாண்ட்; ரூ.21.55 கோடிக்கு டெண்டர் கோரியது மாநகராட்சி
உக்கடத்தில் 2 இடங்களில் அமைகிறது பஸ் ஸ்டாண்ட்; ரூ.21.55 கோடிக்கு டெண்டர் கோரியது மாநகராட்சி
உக்கடத்தில் 2 இடங்களில் அமைகிறது பஸ் ஸ்டாண்ட்; ரூ.21.55 கோடிக்கு டெண்டர் கோரியது மாநகராட்சி
ADDED : நவ 20, 2024 10:40 PM

கோவை: தற்போதுள்ள உக்கடம் பஸ் ஸ்டாண்டில் போதிய வசதிகள் இல்லாததால், ரூ.21.55 கோடியில் நவீன முறையில் இரு இடங்களில் புதுப்பித்து கட்டுவதற்கு மாநகராட்சி திட்டமிட்டு, டெண்டர் கோரியுள்ளது.
உக்கடம் முதல் ஆத்துப்பாலம் வரை மேம்பாலம் கட்டியபோது, துாண்கள் எழுப்புவதற்காக, பஸ் ஸ்டாண்ட் சுற்றுச்சுவர் இடிக்கப்பட்டன. பின், சுங்கம் செல்வதற்கான வழித்தடம் அமைக்க பஸ் ஸ்டாண்ட் வளாகத்துக்குள்ளேயே துாண்கள் எழுப்பப்பட்டன.
பஸ் ஸ்டாண்ட் வளாகமே சிதிலமடைந்து குண்டும் குழியுமானது; பயணிகள் நிற்பதற்கும், காத்திருப்பதற்கும் போதுமான வசதிகள் இல்லை. பஸ் ஸ்டாண்ட் வளாகம் ஒழுங்கற்று இருப்பதால், மாநகராட்சி மூலம் புதுப்பிக்க முடிவெடுக்கப்பட்டது. நவீன முறையில் அமைக்க அறிவுறுத்திய முதல்வர் ஸ்டாலின், ரூ.20 கோடி ஒதுக்குவதாக அறிவித்தார்.
இதையடுத்து, மாநகராட்சி நிர்வாகம் விரிவான திட்ட அறிக்கை தயாரித்தது. இதற்காக இரு பிரிவாக பிரித்து பஸ் ஸ்டாண்ட் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
தற்போது பஸ் ஸ்டாண்ட் செயல்படும் இடத்தில், 11 ஆயிரத்து, 50 சதுர மீட்டருக்கு இட வசதி இருக்கிறது; 2,156.06 சதுர மீட்டருக்கு கட்டுமான பணி நடைபெறும். ஒரே நேரத்தில், 30 பஸ்கள் நிற்கும் வகையில் 'ரேக்'குகள் அமைக்கப்பட உள்ளன. மேலும், வணிக வளாகம், கழிப்பறை, பொருட்கள் பாதுகாப்பு அறை மற்றும் வாகன நிறுத்துமிடங்கள் ஏற்படுத்தப்பட உள்ளன.
பேரூர் பைபாஸில் அமையும் மற்றொரு பஸ் ஸ்டாண்ட் வளாகத்தில், 13 ஆயிரத்து, 250 சதுர மீட்டர் இடமிருக்கிறது; 2,813.31 சதுர மீட்டருக்கு கட்டுமான பணி மேற்கொள்ளப்படும். இங்கு ஒரே நேரத்தில், 28 பஸ்கள் நிறுத்துவதற்கு 'ரேக்'குகள் அமைக்கப்படும். இரண்டு இடங்களில் வணிக வளாகம் மற்றும் கழிப்பறை வளாகம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இப்பணியை, ரூ.21.55 கோடியில் மேற்கொள்ள, மாநகராட்சி டெண்டர் கோரியுள்ளது; டிச., 17 பிற்பகல், 3:00 மணிக்குள் இணையதளம் வழியாக கோர வேண்டும். மறுநாள் டிச., 18ம் தேதி பிற்பகல், 4:00 மணிக்கு திறக்கப்படும் என, மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் அறிவித்துள்ளார்.