/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ரூ.9 கோடியில் வணிக வளாகம் கட்டும் திட்டம்! வியாபாரிகள் கடும் எதிர்ப்பு
/
ரூ.9 கோடியில் வணிக வளாகம் கட்டும் திட்டம்! வியாபாரிகள் கடும் எதிர்ப்பு
ரூ.9 கோடியில் வணிக வளாகம் கட்டும் திட்டம்! வியாபாரிகள் கடும் எதிர்ப்பு
ரூ.9 கோடியில் வணிக வளாகம் கட்டும் திட்டம்! வியாபாரிகள் கடும் எதிர்ப்பு
ADDED : ஆக 29, 2025 09:34 PM

வால்பாறை, ; வால்பாறையில், புதுமார்க்கெட் பகுதியை புதுப்பிக்க வேண்டுமென, வியாபாரிகள் வலியுறுத்தி வருகின்றனர்.
வால்பாறை புதுமார்க்கெட் பகுதியில், நகராட்சிக்கு சொந்தமான, 300க்கும் மேற்பட்ட கடைகள் மாதவாடகை அடிப்படையில் செயல்படுகின்றன. இது தவிர, மார்க்கெட் நுழைவுவாயிலில் இருந்து மீன் மார்க்கெட் வரை, ஆக்கிரமிப்புக்கடைகளும் அதிகளவில் உள்ளன. மக்கள் நடந்து செல்லும் நடைபாதையை ஆக்கிரமித்தும் கடைகள் வைக்கப்பட்டுள்ளன.
மார்க்கெட் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்பு கடைகளால், அவசரத்தேவைக்கு ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்கள் செல்ல முடியாத நிலை உள்ளது. மார்க்கெட் பகுதியில், நகராட்சி இடத்தை பல்வேறு கட்சியை சேர்ந்தவர்கள் ஆக்கிரமிப்பு செய்து பல ஆண்டுகளாக கடைகள் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், கடந்த ஏப்., மாதம் சட்டசபையில் பேசிய உள்ளாட்சித்துறை அமைச்சர், வால்பாறை புதுமார்க்கெட் பகுதியில் நிலவும் பல்வேறு பிரச்னைகளுக்கு தீர்வு காணும் வகையில், 'கார் பார்க்கிங்' வசதியுடன் கூடிய வணிக வளாகம், 9 கோடி ரூபாய் மதிப்பீட்டில் விரைவில் துவங்கப்படும், என்றார்.
அமைச்சரின் இந்த அறிவிப்புக்கு அ.தி.மு.க., உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், கடந்த வாரம் நடந்த நகராட்சி கவுன்சில் கூட்டத்தில், மார்க்கெட் பகுதியை புதுப்பிக்க கவுன்சிலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
மார்க்கெட் பகுதியில் பல ஆண்டுகளாக கடை நடத்தி வரும் வியாபாரிகள், பாதிக்கப்படுவார்கள் என்பதால், மார்க்கெட் பகுதி வியாபாரிகளும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
நகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:
அமைச்சர் உத்தரவு படி, மார்க்கெட் பகுதியில் புதிய வணிக வளாகம் நவீன முறையில் கட்டும் பணி விரைவில் துவங்கப்படும். பணி துவங்கும் முன், மார்க்கெட் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்பு கடைகள் முதலில் அகற்றப்படும்.
அவர்களுக்கு மாற்று இடம் வழங்கப்பட்ட பின், கட்டுமான பணிகள் துவங்கப்படும். மேலும் வணிக வளாகம் கட்டும் போது, தற்போது உள்ள நகராட்சி கடைகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் பணிகள் நடைபெறும்.
மேலும், வணிக வளாகத்தில் பூமார்க்கெட், காய்கறிக்கடை, இறைச்சிக்கடை, மளிகை கடைகள், பேக்கரி போன்றவைகளுக்கு தனித்தனியாக கடைகள் ஒதுக்கப்படும். பணி முழுவதுமாக நிறைவடைந்த பின், வியாபாரிகளுக்கு 'டோக்கன்' அடிப்படையில் கடைகள் ஒதுக்கீடு செய்யப்படும்.
இவ்வாறு, கூறினர்.
காலி செய்ய மாட்டோம்! வால்பாறையில், பல ஆண்டுகளாக வாடகை அடிப்படையில் கடை நடத்தி வருகிறோம். சமீபத்தில் தான் மார்க்கெட் பகுதியில் உள்ள கடைகள் நகராட்சி சார்பில், பல லட்சம் செலவில் புதுப்பிக்கப்பட்டன. போதிய வியாபாரம் இல்லாத நிலையிலும், தற்போது கடைகளை நடத்தி வருகிறோம். எங்களை வெளியேற்றி, வணிகவளாகம் கட்டும் போது, தொழில் பாதிக்கும். அதனால், வியாபாரிகள் யாரும் நகராட்சி கடைகளை காலி செய்ய மாட்டோம். - பாலாஜிரவீந்தரன், துணிக்கடை உரிமையாளர்.
கடைகள் நன்றாக உள்ளன! வால்பாறையில், மனித - வனவிலங்கு மோதலால் தொழிலாளர்கள் தொடர்ந்து வெளியேறுவதால், வியாபாரம் பாதிக்கப்பட்டுள்ளது. மார்க்கெட் பகுதியில் கடைகள் நடத்தினாலும், வாடகை கூட செலுத்த முடியாமல் தவிக்கிறோம். இந்நிலையில், வணிகவளாகம் கட்டுவதாக கூறி எங்களை வெளியேற்ற நினைக்கின்றனர். மார்க்கெட் பகுதியில் நகராட்சிக்கு சொந்தமான கடைகள், தற்போது நல்ல நிலையில் தான் உள்ளன. இடித்து கட்ட வேண்டிய அவசியமில்லை. - ஜோதி, டெய்லர்.