/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நம்மாழ்வார் விருதுக்கு பதிவு செய்ய அழைப்பு
/
நம்மாழ்வார் விருதுக்கு பதிவு செய்ய அழைப்பு
ADDED : டிச 20, 2025 08:50 AM
கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு வட்டாரத்தில் உள்ள விவசாயிகள் சிறந்த உயிர்ம உழவருக்கான நம்மாழ்வார் விருது பெற, பதிவு செய்ய வேண்டும் என, வேளாண்துறை அறிவுறுத்தியுள்ளது.
கிணத்துக்கடவு வட்டாரத்தில் ஆண்டுதோறும், 16 ஆயிரம் ஹெக்டேரில் பயிர் சாகுபடி உள்ளது. இதில், இயற்கை வேளாண் முறையில் நஞ்சில்லா உணவுப்பொருள் உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு, மாநில வேளாண் வளர்ச்சி திட்டம் வாயிலாக ஆண்டுதோறும் பரிசுத்தொகை வழங்கப்படுகிறது.
இதில், மாநில தேர்வு குழுவால் தேர்ந்தெடுக்கப்படும், 3 உயிர்ம விவசாயிகளுக்கு தமிழக அரசால் தலா, 2 லட்சம் ரொக்க பரிசு, சான்றிதழ் மற்றும் பதக்கத்துடன் சிறந்த உயிர்ம உழவர்கான நம்மாழ்வார் விருது வழங்கப்படுகிறது.
இந்த விருதை பெற விரும்பும் விவசாயிகள் அங்கக வேளாண் துறை சான்று பெற்றிருக்க வேண்டும். உயிர்ம வேளாண்மையில் குறைந்தது, மூன்று ஆண்டுகள் பயிர் சாகுபடி செய்திருக்க வேண்டும்.
ஒருங்கிணைந்த பண்ணை முறை, பாரம்பரிய விதை ரகங்களை பயன்படுத்துதல், எருவு உற்பத்தி, இயற்கை முறையிலான இடுபொருள் உற்பத்தி, இயற்கை விவசாயத்தில் மதிப்பு கூட்டு பொருள்கள் தயாரித்து லாபம் ஈட்டுதல் உள்ளிட்ட பல்வேறு தகுதிகள் பெற்றிருக்க வேண்டும்.
இந்த விருது பெற விரும்பும் விவசாயிகள் அந்தந்த பகுதி வேளாண் விரிவாக்க மையம் மற்றும், வேளாண் அலுவலர்களை தொடர்பு கொள்ளலாம். மேலும், உழவன் செயலி வாயிலாகவும் பதிவு செய்யலாம்.
இத்தகவலை கிணத்துக்கடவு வேளாண் உதவி இயக்குனர் தேவி மற்றும் வேளாண் துணை அலுவலர் மோகனசுந்தரம் ஆகியோர் தெரிவித்தனர்.

