அரசின் ‘வெற்றி வீடு’ கட்டும் திட்டத்துக்கு அழைப்பு! உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம்
அரசின் ‘வெற்றி வீடு’ கட்டும் திட்டத்துக்கு அழைப்பு! உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம்
ADDED : நவ 29, 2026 05:52 PM
கிணத்துக்கடவு: தமிழக அரசின் ‘வெற்றி வீடு’ திட்டத்துக்கு, கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, ஆனைமலை வட்டாரத்தில் துவங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்துக்கு, தகுதியானவர்கள் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம் என, அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.
தமிழகத்தில் இன்றளவும் வீடு இல்லாதவர்கள், குடிசை வீடுகளில் வசிப்பவர்கள் என, மக்கள் பலர் உள்ளனர். இதை சரி செய்யும் நோக்கில் கடந்த சில ஆண்டுகளாக, ஏழை, எளிய மக்களுக்கு வீடு கட்டி தரும் வகையில் அரசு மானியம் வழங்கி வருகிறது.
கடந்த தி.மு.க., ஆட்சியில், ‘கலைஞர் கனவு இல்லம்’ திட்டம் வாயிலாக பலருக்கு வீடுகள் கட்டித் தரப்பட்டது.
இதை தொடர்ந்து தற்போது உள்ள த.வெ.க., அரசு, ஊரகப்பகுதிகளில் உள்ள ஏழை குடும்பங்களுக்கு நிரந்தர வீடுகள் வழங்குவதற்காக, ‘வெற்றி வீடுகள்’ திட்டத்தை செயல்படுத்துகிறது.
தற்போது முதற்கட்டமாக, 2026–27ம் ஆண்டில், ஒரு வீட்டிற்கு, 5 லட்சம் ரூபாய் என, 70 ஆயிரம் வீடுகள் கட்ட அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
சரியான பயனாளிகளை தேர்ந்தெடுக்க பல்வேறு அரசுத்திட்டத்தின் வாயிலாக, வீடு வேண்டி விண்ணப்பம் செய்தவர்களில், வீடு கிடைக்காமல் இருக்கும் நபர்களை கண்டறிந்து, ஒன்றிய அதிகாரிகள் நேரடியாக சென்று கள ஆய்வு செய்து வருகின்றனர்.
இதில், கிணத்துக்கடவு, பொள்ளாச்சி வடக்கு மற்றும் தெற்கு மற்றும் ஆனைமலை பகுதிகளில், 275 நபர்கள் இருப்பது கண்டறியப்பட்டது.
மேலும், இத்திட்டத்தின் கீழ் புதிதாக வீடு கட்ட நினைக்கும், ஏழை, எளிய மக்கள் பயன் பெற கடந்த, 25ம் தேதியன்று ‘வெற்றி வீடு’ திட்டத்திற்கு என, சிறப்பு கிராம சபை கூட்டம் நடத்தப்பட்டது. ஒன்றிய அதிகாரிகள் இத்திட்டம் குறித்து, பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
என்னென்ன தர வேண்டும்?
ஒன்றிய அதிகாரி ஒருவர் கூறியதாவது:
‘வெற்றி வீடு’ திட்டம் வாயிலாக, ஒவ்வொரு பயனாளிக்கும், 5 லட்சம் மதிப்பிலான வீடு கட்டி தரப்படும். பேஸ் மட்டம் லெவலுக்கு, - 90 ஆயிரம் ரூபாயும், ஜன்னல் மட்டம் அளவுக்கு ஒரு லட்சமும், மேற்கூரை அளவு முடிந்தபின் -1.30 லட்சம் மற்றும் வீடு முழுமை பெற்ற பின் - 1.80 லட்சம் ரூபாய் என, 4 தவணைகளாக பயனாளிகளின் வங்கிக் கணக்குக்கு, பணம் வரவு வைக்கப்படும்.
இத்திட்டத்தில் பயனாளிகள் சேர, ஆதார் கார்டு, ரேஷன் கார்டு, பாஸ்போர்ட் சைஸ் போட்டோ, வருமான சான்று, 2.5 லட்சத்திற்கும் குறைவாக இருக்க வேண்டும், அரசு திட்டத்தில் வீடு வாங்காத நபராக இருப்பது அவசியம், காலி இடத்திற்கான பட்டா வேண்டும். இந்த ஆவணங்கள் முறையாக இருந்தால், இத்திட்டத்தில் பயன்பெறலாம்.
பயனாளிகள் தேர்வு செய்யும் பணிகள் வேகமெடுத்துள்ளது. இப்பணிகள் முடிந்த பின், விரைவில் பயனாளிகளுக்கு வீடு கட்டுவதற்கான பணி ஆணை வழங்கப்படும்.
கோவை மாவட்டத்துக்கு, ‘வெற்றி வீடு’ திட்டத்துக்கு 786 என்ற ஒதுக்கீடு பெறப்பட்டு உள்ளது. விண்ணப்பங்களின் அடிப்படையில் தகுதியானவர்கள் இத்திட்டத்துக்கு பயனாளிகளாக தேர்வு செய்யப்படுவர்.
இவ்வாறு, கூறினார்.
