/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அடையாள எண் பெற பதிவு; விவசாயிகளுக்கு அழைப்பு
/
அடையாள எண் பெற பதிவு; விவசாயிகளுக்கு அழைப்பு
ADDED : பிப் 18, 2025 10:12 PM
அன்னுார்; விவசாயிகளுக்கான தனித்துவ அடையாள எண் பெற, பதிவு செய்து கொள்ள வேளாண்துறை அழைப்பு விடுத்துள்ளது.
அன்னுார் வட்டார வேளாண் உதவி இயக்குனர் பிந்து வெளியிட்டுள்ள அறிக்கை : அன்னுார் வட்டாரத்தில், மின்னணு முறையில், அனைத்து விவசாயிகளின் விபரங்கள் சேகரிக்கப்பட்டு, ஆதார் எண்ணை போல் விவசாயிகளுக்கு தனித்துவமான அடையாள எண் வழங்கப்பட உள்ளது. விவசாயிகளின் ஒப்புதல் பெற்ற பிறகு, விபரங்கள் சேகரிக்கப்பட்டு, அடையாள எண் வழங்கப்படும்.
வரும் காலங்களில் அனைத்து திட்ட உதவிகளும் விவசாயிகளின் விவரங்களின் அடிப்படையில் வழங்கப்படும். அடையாள எண் உருவாக்குவதற்காக, அனைத்து ஊராட்சி அலுவலகத்திலும் முகாம் நடைபெற்று வருகிறது. விவசாயிகள், முகாமிற்கு, ஆதார் அட்டை, நில பட்டா, சிட்டா, ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ள மொபைல் ஆகியவற்றுடன் வந்து பதிவு செய்து அடையாள எண்ணெய் உருவாக்கிக் கொள்ளலாம்.
இனி வரும் காலங்களில் இந்த அடையாள எண்ணை வைத்துத்தான் அனைத்து திட்டங்களையும் பெற முடியும். இந்த எண்ணை பெறுவதன் வாயிலாக ஒவ்வொரு முறையும் திட்டங்களுக்கு விண்ணப்பிக்கும் போது ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டியது இல்லை.
அரசு நலத்திட்டங்கள் சரியான பயனாளிக்கு செல்வதை இதனால் உறுதிப்படுத்த முடியும். எனவே அன்னுார் வட்டார விவசாயிகள் தங்கள் பகுதி ஊராட்சி அலுவலகத்திற்கு சென்று பதிவு செய்து கொள்ள வேண்டும். இவ்வாறு, அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.