UPDATED : அக் 03, 2026 12:00 AM
ADDED : அக் 02, 2026 08:04 PM

வால்பாறை: சீதோஷ்ண நிலை மாற்றத்தால், வால்பாறையில் உள்ள பல்வேறு எஸ்டேட்களில் கவாத்து பணி தீவிரமாக நடக்கிறது.
வால்பாறையில் பல்வேறு எஸ்டேட்களில், 25 ஆயிரம் ெஹக்டேரில் தேயிலை பயிரிடப்பட்டுள்ளது. இது தவிர சிறிய அளவில் காபி, ஏலம், மிளகு போன்ற பயிர்களும் பயிரிடப்பட்டுள்ளன.
இங்குள்ள எஸ்டேட்களில் தயாரிக்கப்படும் தேயிலை துாள், கோவை, கொச்சி, குன்னுார் ஏல மையத்திற்கும், வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
இந்நிலையில், கடந்த ஜூன் மாதம் வால்பாறையில் தென்மேற்கு பருவமழை துவங்கியது. இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை போதிய அளவு பெய்யாத நிலையில், தேயிலைக்கு போதிய அளவு நீர் கிடைக்கவில்லை.
இதனிடையே வால்பாறையில் மாறிவரும் சீதோஷ்ண நிலை மாற்றத்தால், பல்வேறு எஸ்டேட்களில் தேயிலை செடிகளில் காவாத்து பணி நடக்கிறது. தோட்ட அதிகாரிகள் கூறியதாவது:
வால்பாறையில் இந்த ஆண்டு முன் கூட்டியே பருவமழை துவங்கினாலும், எதிர்பார்த்த அளவுக்கு மழை பெய்யவில்லை. இதனால், தேயிலை உற்பத்தியும் படிப்படியாக குறைந்து வருகிறது.
சிதோஷ்ண நிலை மாற்றத்தால் தேயிலை செடிகளுக்கு புத்துணர்ச்சியூட்டும் வகையில், நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை கவாத்து பணி நடக்கிறது. இந்த பணி நிறைவடைந்த நிலையில், 90 நாட்களுக்கு பின் தேயிலை செடிகள் மீண்டும் துளிர்விடத்துவங்கும். இவ்வாறு, கூறினர்.
