சிக்னல்களில் விளம்பர பலகைகளை தொங்க விடலாமா? கலெக்டர் சொல்லியும் அகற்றவில்லை
சிக்னல்களில் விளம்பர பலகைகளை தொங்க விடலாமா? கலெக்டர் சொல்லியும் அகற்றவில்லை
UPDATED : செப் 16, 2026 04:20 PM
ADDED : செப் 16, 2026 03:52 PM
கோவை: வாகன ஓட்டிகளின் கவனத்தை திசை திருப்பும் வகையில், எந்தவொரு இடத்திலும் விளம்பர பலகைகள் வைக்கக் கூடாது என, நீதிமன்றங்கள் பலமுறை அறிவுறுத்தியும், விதிமீறல் தொடர்கிறது.
சமீபகாலமாக மாநகராட்சி, நெடுஞ்சாலைத்துறை மற்றும் போலீஸ் அனுமதியுடன் நிறைய விளம்பர பலகைகள் வைக்கப்படுகின்றன. விதிமீறல் என்பது நன்கு தெரிந்திருந்தும் அனுமதிக்கின்றனர்.
பசுமைப்பகுதியை அதிகரிப்பதாக கூறி, மேம்பாலங்களுக்கு கீழே மையத்தடுப்பில் செயற்கை புற்கள், செடிகள் நட்டு விளம்பர பலகைகள் வைக்கப்படுகின்றன. விளம்பர பலகைகள் நிறுவுவதற்காகவே பசுமைப்பகுதியாக கூறி அனுமதி அளிக்கப்படுகிறது.
போலீசார் முயற்சியில் ரோடு சந்திப்புகளில் ஸ்பான்சர் மூலமாக சிக்னல் கம்பங்கள் நடப்படுகின்றன. அதில், சட்டத்தை செயல்படுத்த வேண்டிய போலீசாரே, கோர்ட் உத்தரவை மீறி, விளம்பர பலகைகளை தொங்க விடுகின்றனர்.
இதுதொடர்பாக, கலெக்டர் பவன்குமார் தலைமையில் சமீபத்தில் நடந்த மாவட்ட சாலை பாதுகாப்பு கமிட்டி கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
சிக்னல்களில் தொங்கும் விளம்பர பலகைகளை அகற்றச் சொல்லி, 6 முறை அறிவுறுத்தப்பட்டு உள்ளது. தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையத்துக்கு சொந்தமான ரோடுகளில் மட்டும் அகற்றப்பட்டது.
மாநகராட்சி, மாநில நெடுஞ்சாலைத்துறை, தேசிய நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான ரோடுகளில் இன்னமும் தொங்குகின்றன.
அவற்றையும் அகற்ற கலெக்டர் அறிவுறுத்தினார். ஸ்பான்சர் மூலமாக நிறுவப்பட்ட சிக்னல் என்பதால் போலீசார் தயங்குகின்றனர்.
'போக்குவரத்து விதிமீறலுக்காக வாகன ஓட்டிகளிடம் அபராதமாக வசூலித்த தொகையே, போலீசாரிடம் கோடிக்கணக்கில் இருக்கிறது. அதை பயன்படுத்தி, சிக்னல் உள்ளிட்ட வசதிகள் செய்யலாம். எதற்காக ஸ்பான்சர்களை தேடி ஓடுகிறார்கள் என தெரியவில்லை' என கேட்கின்றனர் நுகர்வோர் அமைப்பினர்.
வாஸ்தவம்தானே!
