/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கோவை, நீலகிரி, பொள்ளாச்சிக்கு வேட்பாளர்கள் தயார்? உற்சாகத்தில் கொங்கு பா.ஜ.,வினர்
/
கோவை, நீலகிரி, பொள்ளாச்சிக்கு வேட்பாளர்கள் தயார்? உற்சாகத்தில் கொங்கு பா.ஜ.,வினர்
கோவை, நீலகிரி, பொள்ளாச்சிக்கு வேட்பாளர்கள் தயார்? உற்சாகத்தில் கொங்கு பா.ஜ.,வினர்
கோவை, நீலகிரி, பொள்ளாச்சிக்கு வேட்பாளர்கள் தயார்? உற்சாகத்தில் கொங்கு பா.ஜ.,வினர்
UPDATED : பிப் 04, 2024 11:53 AM
ADDED : பிப் 04, 2024 12:33 AM

கொங்கு மண்டலத்துக்குட்பட்ட 3 தொகுதிகளில் வெற்றி பெற்றால், இரண்டு பேருக்கு மத்திய அமைச்சர் பதவி கிடைக்குமென்ற நம்பிக்கையால், பா.ஜ.,கட்சியினர் உற்சாகத்துடன் தேர்தல் பணிகளைத் துவக்கியுள்ளனர்.
வரும் லோக்சபா தேர்தலில், மாநில அளவில் சில தொகுதிகளைத் தேர்வு செய்து, அந்தத் தொகுதிகளில் தீவிரமாகத் தேர்தல் பணி செய்வதற்கு, பா.ஜ., தலைமை கூடுதல் கவனம் செலுத்தி வருகிறது.
இவற்றில், கொங்கு மண்டலத்துக்குட்பட்ட கோவை, நீலகிரி, பொள்ளாச்சி, திருப்பூர் உள்ளிட்ட சில தொகுதிகளில், பா.ஜ.,வுக்கான ஆதரவு பல மடங்கு அதிகரித்துள்ளது.
இதன் காரணமாக, தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்பே, இந்தத் தொகுதிகளுக்கு முன் கூட்டியே வேட்பாளர்களை அறிவித்து, களப்பணி செய்வதற்கு, கட்சித்தலைமை சிக்னல் கொடுத்துள்ளதாகத் தெரியவந்துள்ளது.
அதிலும் கோவை, நீலகிரி மற்றும் பொள்ளாச்சி ஆகிய மூன்று தொகுதிகளுக்கு, இப்போதே வேட்பாளரை கட்சித் தலைமை தேர்வு செய்து, தேர்தல் பணிகளைத் துவங்குவதற்கு வாய்மொழியாக உத்தரவு வழங்கியிருப்பதாக, கட்சி வட்டாரத்தில் தகவல் பரவியுள்ளது.
குறிப்பாக, தற்போது மத்திய அமைச்சராக உள்ள முருகன், நீலகிரி தொகுதியில் போட்டியிடுவது, ஏற்கனவே 100 சதவீதம் உறுதியாகியுள்ளது.
தற்போது ராஜ்யசபா எம்.பி.,யாக இருக்கும் அவரது பதவிக்காலம், 2027 வரை உள்ளது. இதனால், பா.ஜ., மீண்டும் ஆட்சி அமைக்கும் பட்சத்தில், அவர் மீண்டும் மத்திய அமைச்சராகும் வாய்ப்பு அதிகமுள்ளது.
அதேபோல, கோவை தொகுதியில் பா.ஜ., சார்பில் யார் போட்டியிட்டு வெற்றி பெற்றாலும், அவருக்கும் மத்திய அமைச்சரவையில் இடம் கிடைக்குமென்று, அக்கட்சியினர் நம்புகின்றனர்.
கோவை தொகுதியில் தி.மு.க., கூட்டணியில், கமல் போட்டியிடும்பட்சத்தில், வானதிக்கு சீட் கிடைக்க அதிக வாய்ப்புள்ளது.
பொள்ளாச்சி தொகுதியில் போட்டியிடுவதற்கு, மாநில பொதுச் செயலாளர் ஏ.பி.முருகானந்தம், தெற்கு மாவட்டத்தலைவர் வசந்தராஜன் உள்ளிட்ட சிலர், தீவிர முயற்சி செய்து வருகின்றனர்.
பா.ஜ., மேலிடம், இந்த மூன்று தொகுதிகளுக்கும் வேட்பாளரை முடிவு செய்து விட்டதாக, கட்சி நிர்வாகிகள் உறுதிபடத் தெரிவிக்கின்றனர்.
கோவை எம்.பி.,க்கு மத்திய அமைச்சர் பதவி கிடைத்தால், நகருக்கு பல திட்டங்கள் கிடைக்கும்; பல ஆண்டுகளாக முடங்கியுள்ள திட்டங்கள் வேகம் பெறுமென்று, தொழில்துறையினரும் நம்பிக்கை உடன் உள்ளனர்.
இதனால், அவர்களின் ஆதரவு தங்களுக்குக் கிடைக்குமென்று, பா.ஜ., கட்சியினர் நம்புகின்றனர். அந்த நம்பிக்கையுடன், தேர்தல் பணிகளையும் உற்சாகமாகத் துவங்கி விட்டனர்.
-நமது சிறப்பு நிருபர்-