/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வார்டு அளவில் குழந்தைகள் பாதுகாப்பு குழு முன்னேற்பாடுகள் தீவிரம்
/
வார்டு அளவில் குழந்தைகள் பாதுகாப்பு குழு முன்னேற்பாடுகள் தீவிரம்
வார்டு அளவில் குழந்தைகள் பாதுகாப்பு குழு முன்னேற்பாடுகள் தீவிரம்
வார்டு அளவில் குழந்தைகள் பாதுகாப்பு குழு முன்னேற்பாடுகள் தீவிரம்
ADDED : மார் 20, 2025 11:16 PM
பொள்ளாச்சி: பெள்ளாச்சி கல்வி மாவட்டத்தில், வார்டு அளவில் குழந்தைகள் பாதுகாப்பு குழு அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில், பேரூராட்சி, நகராட்சி பகுதிகளில், குழந்தைகள் பாதுகாப்பு குறித்த சேவைகள் அமல்படுத்துவதை உறுதி செய்யும் வகையில், வார்டு அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு குழு அமைக்க, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு நடவடிக்கை எடுத்துள்ளது.
அதன்படி, மூன்று மாதங்களுக்கு ஒரு முறை வார்டு அளவில் குழந்தைகள் பாதுகாப்பு குழுக் கூட்டம் நடத்தப்படவுள்ளது.
அதில், குழந்தைகள் உரிமைகள், குழந்தை திருமணம், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை, குழந்தை கடத்தலைத் தடுத்தல், பள்ளி இடை நிற்றலைத் தடுத்தல், குழந்தை பிறப்பு பதிவு, ஆதார் அட்டை பதிவு, பள்ளியில் சேர்த்தல், தடுப்பூசி போடுதல் மற்றும் மருத்துவப் பரிசோதனை போன்ற கருத்துக்கள் கலந்துரையாடவும் உள்ளது.
இதற்காக, அந்தந்த பகுதிகளில் உள்ள பள்ளி தலைமையாசிரியர்கள் உறுப்பினர் செயலாளராகவும் செயல்படவுள்ளனர்.
இது குறித்து, பள்ளி தலைமையாசிரியர்கள் கூறியதாவது:
வார்டு அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு குழுக் கூட்டம் அமைக்கப்படவுள்ளது. அதில், அந்தந்த பகுதி, உள்ளாட்சி கவுன்சிலர் குழுவின் தலைவராக நியமிக்கப்படுவார். இதேபோல, குழந்தைகள் நல காவல் அலுவலர், நகர்ப்புற சுகாதார செவிலியர், பெற்றோர், குழந்தைகள் பாதுகாப்பு அலகு பிரதி உள்ளிட்ட, 14 பேர் உறுப்பினர்களாக இருப்பர்.
பள்ளித் தலைமையாசிரியர் உறுப்பினர் செயலாளராகவும், அங்கன்வாடி பணியாளர் இணை உறுப்பினர் செயலாளராகவும் நியமிக்கப்படுவர். ஒவ்வொரு காலாண்டின் மூன்றாம் மாதத்தில் (மார்ச், ஜூன், செப்டம்பர், டிசம்பர்) இரண்டாம் வாரம், செவ்வாய்கிழமை அல்லது அதற்கு அடுத்த நாள், கூட்டம் நடத்தப்படும்.
இதன் வாயிலாக குழந்தைகள் சார்ந்த பிரச்னைகள், குழந்தைகள் பாதுகாப்பிற்கு எதிரான பிரச்னைகள் இருப்பின் கண்டறிந்து, அவற்றை சரிசெய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். நிறைவேற்றப்படும் தீர்மானங்கள், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகிற்கு அனுப்பி வைக்கப்படும்.
இவ்வாறு, கூறினர்.