/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சர்க்கரை நோயாளிகளாக மாறி வரும் குழந்தைகள்; பள்ளி கேன்டீன்களில் இனிப்பை தடை செய்ய வலியுறுத்தல்
/
சர்க்கரை நோயாளிகளாக மாறி வரும் குழந்தைகள்; பள்ளி கேன்டீன்களில் இனிப்பை தடை செய்ய வலியுறுத்தல்
சர்க்கரை நோயாளிகளாக மாறி வரும் குழந்தைகள்; பள்ளி கேன்டீன்களில் இனிப்பை தடை செய்ய வலியுறுத்தல்
சர்க்கரை நோயாளிகளாக மாறி வரும் குழந்தைகள்; பள்ளி கேன்டீன்களில் இனிப்பை தடை செய்ய வலியுறுத்தல்
ADDED : மே 29, 2025 12:13 AM

கோவை : குழந்தைகள் மத்தியில் அதிகரிக்கும் சர்க்கரை பயன்பாடு, அவர்களை மெல்ல கொல்லும் விஷமாக மாறிவருகிறது. இதை உடனடியாக தடுக்க வேண்டும். பள்ளிகளில் உள்ள கேன்டீன்களை மூட வேண்டும் என்று, தேசிய குழந்தைகள் நலக்குழுமம் அரசுக்கு பரிந்துரைத்துள்ளது.
மத்திய கல்வி வாரியம், சி.பி.எஸ்.இ., பள்ளிகளில், மாணவர்களில் சர்க்கரை உட்கொள்ளும் அளவு அதிகரித்து இருப்பதையும், இதனால், டைப் 1 சர்க்கரை பாதிப்பு அதிகரித்து இருப்பதுடன், பல்வேறு பாதிப்புகள் ஏற்படுவதை சுட்டிக்காட்டி, விழிப்புணர்வு பதாகை வைக்கவும் அறிவுறுத்தியுள்ளது.
தமிழகத்தை பொறுத்தவரையில், டைப்1 சர்க்கரை நோயால் பாதிக்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதை, உறுதிசெய்து அதை கணக்கெடுக்கும் பணி, தேசிய சுகாதார திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படுகிறது.
2,600 குழந்தைகளுக்கு சர்க்கரை
டைப்1 சர்க்கரை பாதிப்புக்கு, தமிழக அரசு மருத்துவமனைகளில் மட்டும், 2,600 குழந்தைகள் சிகிச்சை பெறுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து, தேசிய குழந்தைகள் நலக்குழும தமிழக தலைவர் ராஜேந்திரன் கூறியதாவது:
உலக சுகாதார நிறுவனம் மற்றும் அமெரிக்க இருதய சங்கம் பரிந்துரையின் படி, 2 முதல் 18 வயதுள்ள குழந்தைகள் அதிகபட்சம், 25 கிராம் சர்க்கரை வழங்குவது பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
ஆனால், காலையில் டீ கொடுப்பது முதல் அத்துடன் பிஸ்கட், சாக்லேட், ஜூஸ், பேக்டு நுாடுல்ஸ், சாஸ், பிரெட், என அனைத்து உணவுகளிலும், சர்க்கரை அதிகளவில் கலந்துள்ளது. இதுபோன்ற, அன்றாட வாழ்வில் சர்க்கரை அதிகம் நுகரும் குழந்தைகள், தற்போது டைப்1 சர்க்கரை நோயாளிகளாக மாறி வருகின்றனர். அதை தவிர்த்து, வளர் சிதை மாற்றங்கள், இதயம் சார்ந்த சிக்கல்கள், உடல் பருமன், பல் சார்ந்த பிரச்னைகள் என, எதிர்காலத்தில் புற்றுநோய் பாதிப்புகள் அதிகரிக்க இதுவே காரணமாக அமையவுள்ளது.
நோயாளிகளால் ஆன சமூகம்
பத்து, இருபது ஆண்டுகளுக்கு முன், இந்த அளவிற்கு சாக்லேட், ஐஸ்கிரீம், பதப்படுத்தப்பட்ட உணவு கள் இல்லை. இவை அனைத்தும் பல பிராண்டுகளில், பல வெரைட்டிகளில் தற்போதைய குழந்தைகளுக்கு எளிதாக கிடைக்கிறது. எதிர்காலத்தில் நோயாளிகள் நிறைந்த சமூகமாக மாறிவிடும். சர்க்கரை மெல்லக்கொல்லும் விஷம். சி.பி.எஸ்.இ., பள்ளிகளில் மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த கூறியிருப்பது மகிழ்ச்சி.
ஆனால், மாநிலம், மத்திய அரசுகளின் கீழ், செயல்படும் அனைத்து பள்ளிகளிலும், 'ஸ்நாக்ஸ் பிரேக்' விடப்படுகிறது. இந்த இடைவேளையில் சர்க்கரை, தேன், நாட்டு சர்க்கரை, கான் சிரப் எந்த வகையிலும் இனிப்புகளை அனுமதிக்கக்கூடாது.
இனிப்புக்கு தடை வேண்டும்
தவிர, பள்ளி கேன்டீன்களில் இனிப்பு, துரித உணவுகளின் விற்பனை, உடனடியாக தடை செய்யப்பட வேண்டும். பள்ளிகளை சுற்றி புகையிலை பொருட்கள் மட்டுமின்றி, இதுபோன்ற பொருட்களின் விற்பனையையும் தடை செய்ய மத்திய, மாநில அரசுகளை குழந்தைகள் நலக்குழுமம் சார்பில் வலியுறுத்தியுள்ளோம்.
இன்றைய குழந்தைகளே, நாளை நாட்டின் எதிர்காலம். ஆனால், சர்க்கரை நுகர்வால், எதிர்காலத்தின் முதுகெலும்பை நாம் உடைத்து வருகிறோம்.உடனடியாக, விழிப்புணர்வு, கண்காணிப்பு செயல்பாடுகளை மேற்கொள்ள வேண்டும். குழந்தைகள் விரும்பவில்லை என்றாலும் பழங்கள், காய்கறி, விதைகள், பருப்பு வகைகளை உட்கொள்ள பழக்கப்படுத்த வேண்டியது அவசியம். இவ்வாறு, அவர் கூறினார்.