/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அங்கன்வாடியில் குழந்தைகள் உட்கார முடியல! மையத்தை புதுப்பிக்க வலியுறுத்தல்
/
அங்கன்வாடியில் குழந்தைகள் உட்கார முடியல! மையத்தை புதுப்பிக்க வலியுறுத்தல்
அங்கன்வாடியில் குழந்தைகள் உட்கார முடியல! மையத்தை புதுப்பிக்க வலியுறுத்தல்
அங்கன்வாடியில் குழந்தைகள் உட்கார முடியல! மையத்தை புதுப்பிக்க வலியுறுத்தல்
ADDED : ஏப் 24, 2025 10:31 PM

பொள்ளாச்சி; பொள்ளாச்சி குமரன் நகர் அங்கன்வாடி மையத்தில், தரை தளம் சேதமடைந்துள்ளதால், குழந்தைகள் மாற்று மையத்துக்கு மாற்றப்பட்டுள்ளனர். இந்த மையம் சீரமைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
பொள்ளாச்சி குமரன் நகரில், கிழக்கு, மேற்கு என இரண்டு அங்கன்வாடி மையங்கள், நகராட்சி பள்ளி அருகே செயல்படுகின்றன. இந்த மையங்களில், தலா, 20 குழந்தைகள் படிக்கின்றனர். குமரன் நகர் மேற்கு அங்கன்வாடி மையத்தில் போதிய வசதிகள் இல்லாததால், குழந்தைகள் சிரமப்படுகின்றனர்.
பெற்றோர் தயக்கம்
மேற்கு அங்கன்வாடி மையத்தில், தரை தளம் போதிய பராமரிப்பின்றி குண்டும், குழியுமாக மாறியுள்ளது. குழந்தைகள், ஓடி விளையாடும் போது, கீழே விழுந்து காயமடைகின்றனர். இதனால், கடந்த, எட்டு மாதங்களாக கிழக்கு மையத்திலேயே, மேற்கு மைய குழந்தைகளும் அமர்ந்துள்ளனர். அங்கு இட நெருக்கடியில் குழந்தைகள் சிரமப்படும் சூழல் உள்ளது.
மேற்கு மையம் பராமரிப்பு இல்லாததால், குழந்தைகளை அனுப்ப பெற்றோர் தயக்கம் காட்டுகின்றனர். மேலும், மையத்தையொட்டி அமைந்துள்ள பள்ளி வளாக மைதானத்தில் புதர் வளர்ந்துள்ளது. மழை காலத்தில், அங்கன்வாடி மையத்துக்குள் மழைநீர் புகும் நிலை உள்ளது.
மையத்தை முறையாக பராமரிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை, என, பெற்றோர் புகார் தெரிவித்தனர்.
பராமரிக்கணும்!
பெற்றோர் கூறுகையில், 'மேற்கு அங்கன்வாடி மையத்தில், பாரத் நகர், சரோஜினி நகர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து குழந்தைகளை அனுப்புகிறோம். ஆனால், போதிய வசதிகள் மேம்படுத்தப்படாமல் உள்ளது. இங்குள்ள, கழிப்பிடம் பராமரிப்பு பணிகள் மேற்கொள்வதற்காக கடந்த, நான்கு மாதங்களுக்கு முன் தோண்டப்பட்டது. அதன்பின், பணிகள் மேற்கொள்ளவில்லை.
எனவே, அங்கன்வாடி மையத்தை புதுப்பிக்கவும், பணிகளை விரைந்து முடித்து, பயன்பாட்டுக்கு கொண்டு வர அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.