--கஞ்சா விற்ற 4 பேர் கைது
கோவை செல்வபுரம் போலீசார் சொக்கம்புதுார் மயானம் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு சந்தேகம்படும் படி நின்றிருந்த, 3 பேரை பிடித்து விசாரித்தனர். அதில் அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தனர். சோதனை செய்தபோது, அவர்கள் கஞ்சா விற்றது கண்டு பிடிக்கப்பட்டது. விசாரணையில், அவர்கள் சொக்கம்புதுார் ஜீவா பாதையை சேர்ந்த ரஞ்சித், 37, உமாஸ், 37, அன்வா, 20 என தெரிந்தது. 3 பேரையும் கைது செய்து, சிறையில் அடைத்தனர். அவர்களிடம் இருந்து, 90 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
* சாய்பாபா காலனி போலீசார் வடகோவை பகுதியில் ரோந்து சென்ற போது அங்கு சந்தேகத்திற்கிடமான வகையில் இருந்த வாலிபரை பிடித்து விசாரித்தனர். அப்போது அவரிடம் கஞ்சா மற்றும் கத்தி இருப்பது தெரியவந்தது. விசாரணையில், அவர் சாய்பாபா காலனியை சேர்ந்த பரத் குமார், 20 என்பதும் அப்பகுதியில் கஞ்சா விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது. போலீசார் அவரிடம் இருந்த 150 கிராம் கஞ்சா, கத்தி பறிமுதல் செய்து பரத் குமாரை கைது செய்தனர்.
நகை, பணம் திருட்டு
சேலம் மாவட்டத்தை சேர்ந்தவர் செந்தில் வேல், 40. மணியகாரம்பாளையம், அன்னை நகரில் தங்கியிருந்து பணியாற்றி வருகிறார். இவர் கடந்த நவ., 29ம் தேதி சொந்த ஊரான சேலத்திற்கு சென்றிருந்தார். பின்னர், டிச., 1ம் தேதி சேலத்தில் இருந்து வந்த போது, வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருந்தது. பீரோவில் இருந்து சுமார், ஏழு சவரன் தங்க நகை மற்றும் ரூ. 25 ஆயிரம் பணம் உள்ளிட்டவை திருட்டு போயிருந்தது. செந்தில்வேல் அளித்த புகாரின் பேரில், சரவணம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
குட்கா விற்ற இளம்பெண் கைது
கோவை உக்கடம் போலீசார் பெரிய கடை வீதி பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு சந்தேகத்திற்கிடமாக நின்றிருந்த இளம்பெண் ஒருவரை பிடித்து அவர் வைத்திருந்த மூட்டையை சோதனை செய்தனர். அதில் குட்கா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. போலீசார் அந்த பெண்ணை போலீஸ் ஸ்டேஷன் அழைத்து சென்று விசாரித்தனர். விசாரணையில் அவர் காந்திபுரத்தை சேர்ந்த ராஜேஸ்வரி, 32 என்பதும், அவர் கடையில் வைத்து குட்கா விற்று வந்ததும் தெரிந்தது. போலீசார் வழக்கு பதிந்து ராஜேஸ்வரியை கைது செய்து, சிறையில் அடைத்தனர். அவரிடம் இருந்த, 23 கிலோ குட்காவை பறிமுதல் செய்தனர்.
சிலிண்டர் பயன்படுத்தியவர் கைது
கோவை சாய்பாபா காலனி போலீசார், மேட்டுப்பாளையம் ரோட்டில் ரோந்து சென்றனர். அப்போது அங்குள்ள தனியார் மருத்துவமனை அருகே இருந்த டீக்கடையில் வாலிபர் ஒருவர் காஸ் சிலிண்டரை பாதுகாப்பற்ற முறையில் கையாண்டு கொண்டு கொண்டு இருந்தார். விசாரணையில் அவர் பெயர் ராஜா, 26 என்பது தெரியவந்தது. பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றாமல் காஸ் சிலிண்டரை பயன்படுத்தியதாக, வழக்கு பதிந்து கைது செய்தனர்.