வீட்டில் கொள்ளை முயற்சி
கோவை, வெள்ளக்கிணறு அருகே உள்ள மான்செஸ்டர் கார்டன் சிட்டி பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ், 57. இவருக்கு கோவை பீளமேட்டிலும் சொந்தமாக வீடு உள்ளது. இவர் கடந்த, 5ம் தேதி வீட்டை பூட்டி விட்டு பீளமேட்டில் உள்ள வீட்டிற்கு சென்றார். நேற்று முன்தினம், ரமேஷ் வெள்ளக்கிணறு பகுதியில் உள்ள வீட்டிற்கு திரும்பினார். அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்தது. பொருட்கள் எதுவும் கொள்ளை போகவில்லை. ரமேஷ் புகாரின் படி, துடியலுார் போலீசார் வழக்கு பதிந்து, கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
-- உயிரிழந்து கிடந்த வாலிபர்
கோவை சின்னவேடம்பட்டி, அத்திப்பாளையம் ரோட்டில் தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. அந்த பள்ளியில் துாத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த சோமு என்பவர் காவலாளியாக பணிபுரிந்து வருகிறார். நேற்று முன்தினம் அவர், பள்ளி வளாகத்தை சுற்றி ரோந்து வந்தார். அப்போது வாலிபால் மைதானத்தில், 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் தலையில் காயத்துடன் உயிரிழந்து கிடந்தார். அதிர்ச்சி அடைந்த சோமு, பள்ளி நிர்வாகத்தினருக்கும், போலீசாருக்கும் தகவல் தெரிவித்தார். சரவணம்பட்டி போலீசார், வாலிபரின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
-குளத்தில் வாலிபர் சடலம்
கோவை சிங்காநல்லுார், பகுதியில் உள்ள குளத்தில், 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் சடலமாக கிடப்பதாக, அப்பகுதி கிராம நிர்வாக அதிகாரி லாவண்யாவிற்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, அவர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று வாலிபர் உடலை மீட்டு, கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
-- கஞ்சா விற்ற 3 பேர் கைது
கோவை கவுண்டம்பாளையம் போலீசார் நேற்று முன்தினம் அந்த பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு சந்தேகத்தின்பேரில், நின்றிருந்த 3 பேரை பிடித்து விசாரித்தனர். அதில், அவர்கள் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு இருந்தது தெரிந்தது. போலீசார் வழக்கு பதிந்து, கஞ்சா விற்ற கவுண்டம்பாளையம் அம்மன் நகரை சேர்ந்த அரவிந்தன், 25, பூலுவப்பட்டியை சேர்ந்த சிவபிரகாஷ், 30, காரமடையை சேர்ந்த அந்தோணி, 36 ஆகிய மூன்று பேரை கைது செய்து, சிறையில் அடைத்தனர். அவர்களிடம் இருந்து, 2.5 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.