ADDED : பிப் 16, 2025 11:59 PM
விபத்தில் கல்லுாரி மாணவி பலி
திண்டுக்கல் மாவட்டம், ரெட்டியார் சத்திரத்தை சேர்ந்தவர் அக்சயா, 20; கோவை கல்லுாரியில் படித்து வருகிறார். நேற்று முன்தினம் மதியம், 1:00 மணிக்கு கரும்புக்கடை பகுதியில் நண்பர் விஸ்வேதா, 20 உடன் ஸ்கூட்டியில் சென்று கொண்டிருந்தார். அப்போது ஸ்கூட்டி கட்டுப்பாட்டை இழந்து ரோட்டில் கவிழ்ந்தது. இருவரும் துாக்கி வீசப்பட்டனர். படுகாயமடைந்த இருவரையும் அருகிலிருந்தவர்கள் மீட்டு, கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், அக்சயா வழியிலேயே உயிரிழந்தார். விஸ்வேதாவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேற்கு போக்குவரத்து புலனாய்வு போலீசார் விசாரிக்கின்றனர்.
கஞ்சா கடத்தல்; நால்வருக்கு சிறை
கோவை பீளமேடு போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, சவுரிபாளையம் ரோட்டில் பாலத்தின் அருகே, நான்கு பேர் சந்தேகத்துக்கு இடமான வகையில் நின்றிருந்தனர். அவர்களிடம் நடத்திய சோதனையில், கஞ்சா மறைத்து வைத்திருப்பது தெரிந்தது. விசாரணையில் அவர்கள், போத்தனூரை சேர்ந்த காட்வின், 21, உப்பிலிபாளையத்தை சேர்ந்த பத்ரி, 20, பீளமேட்டை சேர்ந்த ஜிக்சன், 29, ஒண்டிப்புதூரை சேர்ந்த தினேஷ், 23 எனத் தெரிந்தது. நான்கு பேரையும் சிறையில் அடைத்த போலீசார், அவர்களிடம் இருந்து ஒரு கிலோ, 250 கிராம் கஞ்சா, கஞ்சா பொட்டலமிட வைத்திருந்த, 15 கவர்களை பறிமுதல் செய்தனர்.
பெண் மர்ம மரணம்
கோவை, பி.என்.பாளையம் பழையூரில் தனியார் தங்கும் விடுதியில் கடந்த இரு மாதங்களாக, சென்னை துரைபாக்கத்தை சேர்ந்த இப்ராஹிம் பாதுஷா, 55, சம்சாத் பேகம், 50 ஆகியோர் தங்கியிருந்தனர். அண்ணன், தங்கையான இருவரும் உடல் பருமன் பிரச்னைக்காக, கோவை மருத்துவமனையில் ஆயுர்வேத சிகிச்சை பெற வந்திருப்பதாக தெரிவித்தனர்.
நேற்று முன்தினம் இப்ராஹிம் பாதுஷா, விடுதி ஊழியரிடம் வங்கியிலிருந்து பணம் எடுத்து வருவதாக கூறிச் சென்றார்; திரும்பவில்லை. விடுதி ஊழியர்கள் சந்தேகமடைந்து அவர் இருந்த அறை கதவை தட்டினர். கதவு திறக்கப்படவில்லை. ஊழியர்கள் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது, படுக்கையில் சம்சாத்பேகம் இறந்து கிடந்தார். காட்டூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
கழுத்தை நெறித்து பணம் பறிமுதல்
கோவை, ஹோப்ஸ் காலேஜ் வ.உ.சி., தெருவை சேர்ந்தவர் பாலசுப்ரமணியம், 27. மசக்காளிபாளையம் பகுதியில், தனது நண்பருக்காக காத்திருந்தார். அப்போது அவரின் பின்புறம் வந்த மர்மநபர் கழுத்தை நெறித்து, பணம் கேட்டு மிரட்டி, ரூ.500 ஐ பறித்துக் கொண்டார். அச்சமயம் பாலசுப்ரமணியத்தின் நண்பர் அங்கு வரவே, மர்மநபர் அங்கிருந்து பைக்கில் தப்பினார். பாலசுப்ரமணியம் புகாரின் பேரில், வழக்கு பதிந்த பீளமேடு போலீசார் விசாரித்தனர். விசாரணையில் பணப்பறிப்பில் ஈடுபட்டது, கோவை மதுக்கரை மார்கெட்டை சேர்ந்த யுவராஜ், 36 எனத் தெரிந்தது. அவரை போலீசார் சிறையில் அடைத்தனர்.