ADDED : ஜூலை 08, 2025 10:05 PM
பெண்ணை தாக்கிய இருவர் கைது
தெலுங்குபாளையம், உடையர் வீதியை சேர்ந்தவர் சஞ்சய், 21; அவரது அத்தை வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது, அவரை வழிமறித்த இருவர் மது குடிக்க பணம் கேட்டு மிரட்டினர். சஞ்சய் பணம் கொடுக்க மறுத்ததால், அவரை தாக்கி கீழே தள்ளி விட்டனர். இதைப்பார்த்த சஞ்சயின் அத்தை அவர்களை கண்டித்த போது, அவரையும் கீழே தள்ளி விட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். சஞ்சய் அளித்த புகாரில் செல்வபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சொக்கம் புதுாரை சேர்ந்த மோகன் குமார், 21 மற்றும் கார்த்திக், 26 ஆகியோரை கைது செய்து, சிறையில் அடைத்தனர்.
கஞ்சா பறிமுதல்
வடவள்ளி போலீசார் கருப்பராயன்கோவில் அருகில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு சந்தேகத்திற்கிடமான வகையில் வாலிபர் ஒருவர் நின்று கொண்டிருந்தார். அவரிடம் விசாரித்த போது, அவர் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்ததால் சந்தேகம் அடைந்த போலீசார் அவரிடம் சோதனை செய்தனர். அப்போது, அவரிடம் கஞ்சா இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் அவரை போலீஸ் ஸ்டேஷன் அழைத்து சென்று விசாரித்த போது, அவர் வடவள்ளி, வீரகேரளம் பகுதியை சேர்ந்த சபரி கிரி, 27 என்பது தெரியவந்தது. அவரை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
சட்ட விரோத மது விற்பனை
மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசார் சாய்பாபா காலனியில், என்.எஸ்.ஆர்., ரோட்டில் உள்ள டாஸ்மாக் மதுபான கடையில் நேற்று முன்தினம் காலை, 7:30 மணிக்கு சோதனை மேற்கொண்டனர். அப்போது, அரசு அனுமதித்த நேரத்திற்கு முன்பே மது விற்பனை செய்யப்படுவது தெரியவந்தது. போலீசார் அங்கு மது விற்பனையில் ஈடுபட்டிருந்த புதுக்கோட்டையை சேர்ந்த செல்வகுமார், 33 என்பரை கைது செய்து, 60 மதுபாட்டில்கள், ரூ. 1,200 பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். செல்வகுமாரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
போலீசார் மீது நடவடிக்கைக்கு மனு
அகில இந்திய பார்வர்ட் பிளாக் கோவை மாவட்ட செயலாளர் சவுந்தரபாண்டி அளித்த புகார் மனுவில், 'கடந்த மார்ச் மாதம் எனக்கும் அங்குராஜ் என்பவருக்கும் ஏற்பட்ட தகராறில், எந்த முகாந்திரமும் இல்லாமல் போலீசார் என்னை அழைத்து சென்று, அடித்து துன்புறுத்தியதாக போலீஸ் கமிஷனருக்கு அஞ்சல் வாயிலாக புகார் அனுப்பினேன். மூன்று மாதங்களுக்கு பிறகு, காட்டூர் போலீஸ் ஸ்டேஷனில் இருந்து என்னை அழைத்து பேசினர். அலட்சியமாக பேசினர். என்னை தாக்கி உடல் ரீதியாக துன்புறுத்திய போலீசாருக்கு சாதகமாக, அதிகாரிகள் செயல்பட்டு வருவதாக தெரிகிறது. என்னை தாக்கிய போலீசார் மீது, சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். புகாருக்கு முறையான சி.எஸ்.ஆர்., வழங்கி விசாரணை நடத்த வேண்டும்' என கூறியுள்ளார்.