/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கடைகளை சுத்தப்படுத்தி ரோட்டில் குப்பை குவிப்பு
/
கடைகளை சுத்தப்படுத்தி ரோட்டில் குப்பை குவிப்பு
ADDED : ஜூன் 26, 2025 09:38 PM
பொள்ளாச்சி; பொள்ளாச்சி கடைவீதிகளில், காலை நேரத்தில், கடைகளை சுத்தம் செய்து, சேகரமாகும் குப்பையை ரோட்டில் குவிப்பதால், சுகாதாரம் பாதிக்கிறது.
பொள்ளாச்சி நகராட்சியில், திடக்கழிவு மேலாண்மை திட்டம் செயல்படுத்தப்படுகிறது. அதன்படி, திடக்கழிவுகளை அப்புறப்படுத்த வீடுகள் தோறும் சேவை வரி வசூலிக்கப்படுகிறது. திறந்தவெளியில் குப்பை கொட்டுவதை தவிர்த்து, மக்கும் குப்பை, மக்காத குப்பை என பிரித்து வழங்கவும் அறிவுறுத்தப்படுகிறது.
இந்நிலையில், வணிகக் கடைக்காரர்கள் பலர், நகராட்சி துாய்மை பணியாளர்களிடம் குப்பையை நேரடியாக வழங்குவதில்லை. குறிப்பாக, கடைவீதி கடைக்காரர்கள், காலை நேரத்தில், கடைகளை சுத்தம் செய்து, அங்கு சேகரமாகும் குப்பையை ரோட்டில் கொட்டுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். அவற்றை அப்புறப்படுத்துவதில், காலதாமதம் ஏற்படுவதால், சுகாதார சீர்கேடும் ஏற்படுகிறது.
தன்னார்வலர்கள் கூறியதாவது:
கடைவீதி கடைகளில் சேகரிக்கப்படும் குப்பை, ரோட்டின் ஓரத்தில் குவிக்கப்படுகிறது. போட்டி போட்டுக்கொண்டு ஒவ்வொருவரும் இத்தகைய செயலில் ஈடுபடுவதால், அப்பகுதி அசுத்தமாக காட்சியளிக்கிறது.
மேலும், காற்றுக்கு ரோடு முழுவதும் குப்பை பரவி விடுகிறது. இப்பிரச்னைக்கு தீர்வு காண, கடைக்காரர்கள் குப்பையை ரோட்டில் கொட்டுவதை தவிர்க்க வேண்டும். நகராட்சி நிர்வாகம் குப்பையை முறையாக அப்புறப்படுத்த வேண்டும்.
பொள்ளாச்சியில் திடக்கழிவு மேலாண்மை திட்டம் செயல்படுத்தும் நிலையில், தினமும் வீடு வீடாக குப்பையை தரம் பிரித்து பெற வேண்டும். பொது இடங்களில் குப்பை கொட்டுவோருக்கு அபராதம் விதித்து கட்டுப்படுத்த வேண்டும்.
இவ்வாறு, கூறினர்.