வாய்க்காலில் ஏற்பட்டது அடைப்பு; குளங்களுக்கு நீர் செல்வதில் சிக்கல்
வாய்க்காலில் ஏற்பட்டது அடைப்பு; குளங்களுக்கு நீர் செல்வதில் சிக்கல்
ADDED : ஜூலை 14, 2026 07:39 AM

தொண்டாமுத்தூர்: கீழ்சித்தரைச்சாவடி வாய்க்காலில் பல இடங்களிலும், மரக்கிளைகள் மற்றும் குப்பையால் அடைப்பு ஏற்பட்டுள்ளதால், குளங்களுக்கு நீர் செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
நொய்யல் ஆற்றின் முதல் தடுப்பணையாக சித்திரைச்சாவடி தடுப்பணை உள்ளது. இந்தச் சித்திரைச்சாவடி தடுப்பணையிலிருந்து, கீழ் சித்திரைச்சாவடி வாய்க்கால் உருவாகி, தொண்டாமுத்தூர், வேடபட்டி வழியாக சென்று, புதுக்குளம், கொளராம்பதி, நரசாம்பதி, கிருஷ்ணாம்பதி உள்ளிட்ட பல குளங்களுக்கும் நீர் கொண்டு செல்கிறது.
அதோடு, செல்லும் வழியில் உள்ள மதகுகள் வழியாக விளை நிலங்களுக்கும் பாசனம் கிடைத்து வருகிறது. இந்நிலையில், மேற்கு தொடர்ச்சி மலையில், கடந்த வாரம் பெய்த தொடர் மழை காரணமாக, நொய்யல் ஆற்றில் நீர்வரத்து வந்தது.
இதனால், கீழ்ச்சித்திரைச்சாவடி வாய்க்கால் மூலம் குளங்களுக்கு நீர் கொண்டு செல்லப்பட்டது. அப்போது, நீரில் அடித்துவரப்பட்ட மரக்கிளைகள், தென்னை மர ஓலைகள், குப்பை உள்ளிட்டவை வாய்க்காலில் பல இடங்களிலும் குவிந்து, அடைப்பு ஏற்பட்டுள்ளது.
குளங்களுக்கு நீர் செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. வாய்க்காலில் உள்ள அடைப்புகளை நீக்கி, குளங்களுக்கு தங்குதடையின்றி நீர் செல்ல, நீர்வளத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
