/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தென்னை விவசாயத்தை பாதுகாக்க வேண்டும்! பிரதமருக்கு எம்.எல்.ஏ. கடிதம்
/
தென்னை விவசாயத்தை பாதுகாக்க வேண்டும்! பிரதமருக்கு எம்.எல்.ஏ. கடிதம்
தென்னை விவசாயத்தை பாதுகாக்க வேண்டும்! பிரதமருக்கு எம்.எல்.ஏ. கடிதம்
தென்னை விவசாயத்தை பாதுகாக்க வேண்டும்! பிரதமருக்கு எம்.எல்.ஏ. கடிதம்
ADDED : நவ 22, 2025 05:32 AM
பொள்ளாச்சி: 'தென்னையில் நோய் தாக்குதல்களை கட்டுப்படுத்த குழு அமைத்து ஆய்வு செய்து தீர்வு காண வேண்டும்,' என, எம்.எல்.ஏ. பொள்ளாச்சி ஜெயராமன், பிரதமர் மோடிக்கு கடிதம் அனுப்பினார்.
பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதிகளில், மற்ற சாகுபடிகளை விட தென்னை அதிகளவு சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இப்பகுதிகளில், சாகுபடி செய்யப்படும் தேங்காய், கொப்பரை போன்றவை பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பப்படுகிறது.
சில ஆண்டுகளாக வெள்ளை ஈ தாக்குதல், கேரளா வேர் வாடல் என பலவிதமான நோய்கள் தாக்கியதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.இந்நிலையில், தென்னை விவசாயத்தை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, எம்.எல்.ஏ. பொள்ளாச்சி ஜெயராமன், பிரதமர் மோடிக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.
அதில் கூறியிருப்பதாவது:
இந்தியாவில், கேரளா மாநிலத்தை விட கூடுதலாக தென்னை விவசாயம் நடைபெறும் பகுதியாக பொள்ளாச்சி உள்ளது. தற்போது, ரூகோஸ் சுருள் வெள்ளை ஈ தாக்குதல், காண்டாமிருக வண்டு தாக்குதல், கேரளா வாடல் நோய், தஞ்சாவூர் வாடல் நோய், கேரளா மஞ்சள்வாடல், சிலந்தி பூச்சி, கருந்தளை புழு தாக்குதல், பென்சில் முனை தாக்குதல் உள்ளிட்ட பல்வேறு நோய் தாக்குதல்களால் தென்னை மரங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
இதனால், 10ல் ஒரு பங்கு தான் விளைச்சல் உள்ளது. நோய் தாக்குதலால் தென்னை விவசாயிகள், தென்னை மரங்களை பராமரிக்கவும் முடியாமல், அழிக்கவும் முடியாமல் திணறுகின்றனர்.
நோய் தாக்குதலில் இருந்து தப்பிக்க பல வழிமுறைகளை பின்பற்றியும், பயனில்லாமல் போனதால் தமிழக தென்னை விவசாயிகள், கடுமையாக பாதிக்கப்பட்டு ஆங்காங்கே தென்னை மரங்களை வெட்டுகின்றனர்.
மத்திய, மாநில அரசுகளின் தென்னை வளர்ச்சி வாரியம், வேளாண் பல்கலை மற்றும் வட்டாரம் தோறும் தோட்டக்கலைத்துறை அலுவலகங்கள், வேளாண்துறை என பல பிரிவுகள் இருந்தாலும், தென்னை மரங்களை தாக்கும் நோய்களுக்கு தீர்வு காண இயலவில்லை.
கோவை வேளாண் பல்கலை, நோய்களை தீர்க்க சரியான நடவடிக்கை எடுக்காமல் மெத்தன போக்கோடு உள்ளது.இப்பிரச்னைக்கு தீர்வு காணாவிட்டால், தென்னை விவசாயம் அடியோடு அழிந்துவிடும். இன்னும், 10 ஆண்டுகள் கழித்து தென்னை மரங்கள் காட்சி பொருளாகும் என மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பப்பட்டது.
இதனால், மத்திய வேளாண்துறை அமைச்சகம் தென்னையில் வேர்வாடல் நோய் குறித்து ஆய்வு செய்ய குழு அமைத்துள்ளது.தற்போது, தென்னையை தாக்கும் அனைத்து நோய்களை கண்டறிந்து தீர்க்க மற்றொரு குழு அமைத்து உடனடியாக தீர்வு காண வேண்டும்.
இவ்வாறு, தெரிவிக்கப்பட்டுள்ளது.

