/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மகசூலை அதிகரிக்க உதவும் தென்னை டானிக்! விவசாயிகள் பயன்பெற அழைப்பு
/
மகசூலை அதிகரிக்க உதவும் தென்னை டானிக்! விவசாயிகள் பயன்பெற அழைப்பு
மகசூலை அதிகரிக்க உதவும் தென்னை டானிக்! விவசாயிகள் பயன்பெற அழைப்பு
மகசூலை அதிகரிக்க உதவும் தென்னை டானிக்! விவசாயிகள் பயன்பெற அழைப்பு
ADDED : டிச 15, 2024 11:06 PM
ஆனைமலை; 'தென்னை மகசூலை அதிகரிக்க, தென்னை டானிக் கட்டி பயன்பெறலாம்,' என ஆழியாறு தென்னை ஆராய்ச்சி நிலைய தலைவர், விவசாயிகளுக்கு அறிவுறுத்தினார்.
ஆழியாறு தென்னை ஆராய்சசி நிலைய தலைவர் சுதாலட்சுமி அறிக்கை:
தென்னை மரங்களை சரியான நேரத்தில், சரியான அளவில் இயற்கை மற்றும் ரசாயன உரங்களைப் பயன்படுத்தி நீடித்த நிலையான வேளாண்மைக்கு வழிவகுக்க வேண்டும். முக்கிய ஊட்டச்சத்துக்களாக, மரம் ஒன்றுக்கு ஆண்டு ஒன்றுக்கு யூரியா 1.3 கிலோ, சூப்பர் பாஸ்பேட் 2 கிலோ, பொட்டாஷ் 3.5 கிலோ மற்றும் வேப்பம் புண்ணாக்கு 5 கிலோ, மெக்னீசியம் சல்பேட் 1 கிலோ ஆகியவற்றை பண்ணை எருவுடன் கலந்து இடலாம்.
தென்னையில் குரும்பை உதிர்வதற்கும், பென்சில் முனை குறைபாட்டிற்கும், பூச்சி மற்றும் நோய்களுக்கு எளிதில் இலக்காவதற்கும், நுண்ணுாட்டச் சத்துக்களின் பற்றாக்குறை மிக முக்கிய காரணமாகும். இவற்றை களைய, குறைந்த செலவில் விரைவாக மற்றும் நிறைந்த பயன் தரக்கூடிய'தென்னை டானிக்' கோவை வேளாண் பல்கலைகழக வாயிலாகஉற்பத்தி செய்து,ஆழியாறு தென்னை ஆராய்ச்சி நிலையத்தில் விநியோகிக்கப்படுகிறது.
'தென்னை டானிக்' கட்டும் போது மண்ணில் ஈரப்பதம் குறைவாக இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். தென்னை மரத்தின் அடி தண்டில் இருந்து இரண்டரை அடி முதல், மூன்று அடி தள்ளி, உறிஞ்சும் வேர்கள் அதிகளவில் காணப்படும் பகுதியில், ஒரு அடி வரை மண்ணை பறிக்க வேண்டும்.
பென்சில் கனமுள்ள இளஞ்சிகப்பு வேரை தேர்வு செய்து, நுனிப்பகுதியை கத்தியால் சீவ வேண்டும். 40 மி.லி., தென்னை டானிக் மற்றும் 60 மி.லி தண்ணீர் கலந்து, நெகிழிப்பையில் வேரின் அடி வரை நுழைத்து கட்ட வேண்டும்.
ஆண்டுக்கு இருமுறை (6 மாதத்திற்கு ஒருமுறை) வேர் வாயிலாக செலுத்த வேண்டும். ஓரிரு நாட்களில், 100 மி.லி., ஊட்டச்சத்து மரத்தின் மேல் பகுதி வரை சென்றடையும். அதன் பின், பாலித்தீன் பையை அகற்றி மண்ணை அணைத்து விட வேண்டும்.
இவ்வாறு, வேரில் நுண்ணூட்டச்சத்து செலுத்துவதால் எளிதில் வேரின் வாயிலாக ஊடுருவிச் சென்று, மரத்தின் உயிர் வேதியியல் செயல்பாடுகளில் சேதம் விளைவிக்காமல் மரத்திற்கு தேவையான சரிவிகித ஊட்டச்சத்துகளையும் பெற்றுத்தருகிறது.
'தென்னை டானிக்' விலை லிட்டருக்கு, 325 ரூபாயாகும். ஒரு லிட்டர், 25 தென்னை மரங்களுக்கு போதுமானது. ஒரு மரத்தின் டானிக் விலை கட்டும் செலவு இல்லாமல், 13 ரூபாயாகும். தென்னை டானிக் கொடுக்கும் போது தேங்காய் அல்லது இளநீர் மகசூல் 20 சதவீதம் வரை அதிகரிக்கும். குரும்பை உதிர்வது கட்டுப்படுத்தப்பட்டு, பூச்சி மற்றும் நோய் தாங்குதிறன் அதிகரிக்கிறது. மகசூல் அதிகரிப்பதுடன் கூடுதல் லாபமும் கிடைக்கும்.
எனவே விவசாயிகள், தென்னைக்குத் தேவையான வளர்ச்சி ஊக்கிகள் மற்றும் நுண்ணுாட்ட சத்துக்களை உள்ளடக்கிய தென்னை டானிக்கை தென்னை மரங்களுக்கு அளித்து பயன் அடையலாம். தேவைப்படும் விவசாயிகள் தென்னை ஆராய்ச்சி நிலையம், ஆழியாறுக்கு நேரில் வந்து பெற்றுக்கொள்ளலாம்.
இவ்வாறு, தெரிவிக்கப்பட்டுள்ளது.