/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தென்னைக்கு பாசன நீருடன் சாணக்கரைசல்; மரங்களுக்கு எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க முயற்சி
/
தென்னைக்கு பாசன நீருடன் சாணக்கரைசல்; மரங்களுக்கு எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க முயற்சி
தென்னைக்கு பாசன நீருடன் சாணக்கரைசல்; மரங்களுக்கு எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க முயற்சி
தென்னைக்கு பாசன நீருடன் சாணக்கரைசல்; மரங்களுக்கு எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க முயற்சி
ADDED : டிச 25, 2024 08:11 PM

பொள்ளாச்சி; மாட்டுச்சாணத்தை கரைத்து தொட்டியில் விட்டு, நீருடன் கலந்து தென்னை மரங்களுக்கு பாய்த்து, எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் முயற்சியில் பொள்ளாச்சி அருகே விவசாயி ஈடுபட்டுள்ளார்.
'தென்னை' நகரம் என அழைக்கப்படும் பொள்ளாச்சி, அடையாளத்தை இழக்கும் வகையில் கடந்த மூன்று ஆண்டுகளாக பல்வேறு நோய்கள் தாக்கி வருகின்றன. விலை வீழ்ச்சி, வறட்சி போன்றவற்றால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு, நோய் தாக்குதல் பெரும் பிரச்னை உள்ளது.
இதில், கேரளா வேர்வாடல் நோய் பிரச்னைக்கு தீர்வே இல்லாததால், மரங்களை வெட்ட வேண்டிய இக்கட்டான சூழலுக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர்.
மரங்களை காக்க ஏதாவது வழியுள்ளதா என விவசாயிகள், அதிகாரிகளை சந்தித்து ஆலோசனை பெற்று வருகின்றனர். ஒரு சிலர் ஏதாவது செய்தால் காப்பாற்ற முடியுமா என தங்களது முயற்சிகளை விடாமல் செய்து வருகின்றனர்.
புது முயற்சி
இந்நிலையில், பொள்ளாச்சி அருகே விவசாயி ஒருவர், தென்னை மரத்தை காக்க தண்ணீருடன், சாணத்தை கலந்து மரத்துக்கு பாய்ச்சுகிறார்.
காளியப்பகவுண்டன்புதுாரை சேர்ந்த விவசாயி உதயகிரிக்கு, கேரளா மாநிலம் மீனாட்சிபுரத்தில் உள்ள தோட்டத்தில் தென்னை மரங்களை சாகுபடி செய்துள்ளார்.தற்போது வேர்வாடல் நோய் பரவுவதை தடுக்க பாரம்பரியத்துடன் கூடிய முயற்சியை மேற்கொண்டு வருகிறார்.
இவர், 15 முரா எருமைகளை வளர்க்கிறார். மாட்டு தொழுவத்தில் உள்ள சாணத்தை, 'ப்ரஷ் வாஷ்' வாயிலாக தண்ணீர் தெளித்து, சாணக்கரைசலை கால்வாய் வழியாக வெளியேற்றி, அருகே அமைக்கப்பட்ட தொட்டியில் சேர்க்கிறார்.
அந்த மண் தொட்டியில், நிரப்பப்படும் தண்ணீருடன் சாணக்கரைசல் கலக்கப்படுகிறது. அதன்பின், அவை, மோட்டார் வாயிலாக, தென்னை மரங்களுக்கு பாய்ச்சப்படுகிறது. ஒவ்வொரு மரத்துக்கும் பாத்தி வெட்டப்பட்டு, இந்த சாணக்கரைசல் நீர் அப்படியே சொட்டுநீர் குழாய் வாயிலாக விடப்படுகிறது.
மூன்று மணி நேரத்துக்குள் அனைத்து மரங்களுக்கும் இந்த நீர் சென்றுவிடுகிறது. மூன்று மாதத்துக்கு ஒரு முறை இந்த நீர் விட்டால் போதுமானது; மரங்களுக்குரிய சத்து கிடைக்கும் என்கிறார் விவசாயி.
மரத்துக்கு சத்து
விவசாயி உதயகிரி கூறியதாவது:
மாட்டு சாணம் நோய் எதிர்ப்பு சக்தி கொண்டது. இதை தோட்டங்களில் தொட்டியில் போட்டு உலர வைத்து மரங்களுக்கு போடுவது தான் வழக்கம். இதற்கு மாற்றாக என்ன செய்யலாம், தற்போதுள்ள நோய் தாக்குதல்களை எதிர்த்து நிற்க என்ன பண்ணலாம், என, யோசித்து நீருடன், சாண நீரை கலந்து மரத்துக்கு நேரடியாக விடலாம் என முடிவு செய்தோம்.
ஆரம்பத்தில் கசடுகள் அடைத்து நீர் வெளியேறுவதில் சிக்கல் ஏற்பட்டது. தற்போது முறையாக தண்ணீரும், சாணமும் கலந்து செல்வதால் மரத்துக்குரிய சத்து கிடைக்கிறது.இதற்கு ஆட்களும் அதிக தேவையில்லை.
தென்னை மரங்களுக்கு பாய்ச்சுவதால், அவற்றுக்கு எதிர்ப்பு சக்தி கிடைத்து நல்ல முறையில் வளரும் என்ற நம்பிக்கையில் முயற்சி எடுத்துள்ளேன்.
தற்போது, வேர்வாடல் நோயை கட்டுப்படுத்த இந்த முயற்சியை மேற்கொண்டுள்ளேன். ஆனால், மரத்துக்கு அதிகசத்து கிடைக்கும். இது முயற்சி வேர்வாடல் நோயை கட்டுப்படுத்தும் என நம்புகிறேன்.
இவ்வாறு, அவர் கூறினார்.

