/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கேட்டது கோவை; கிடைச்சது பாலக்காடு! பயணியர் கோரிக்கை புறக்கணிப்பு; ரயில்வே நிர்வாகத்தால் புகைச்சல்
/
கேட்டது கோவை; கிடைச்சது பாலக்காடு! பயணியர் கோரிக்கை புறக்கணிப்பு; ரயில்வே நிர்வாகத்தால் புகைச்சல்
கேட்டது கோவை; கிடைச்சது பாலக்காடு! பயணியர் கோரிக்கை புறக்கணிப்பு; ரயில்வே நிர்வாகத்தால் புகைச்சல்
கேட்டது கோவை; கிடைச்சது பாலக்காடு! பயணியர் கோரிக்கை புறக்கணிப்பு; ரயில்வே நிர்வாகத்தால் புகைச்சல்
ADDED : செப் 26, 2024 11:25 PM

பொள்ளாச்சி : கோவை - மயிலாடுதுறை இடையே ரயில் இயக்க வேண்டுமென கோரிக்கை விடுத்த நிலையில், மயிலாடுதுறை - பாலக்காடுக்கு ரயில் இயக்க ரயில்வே நிர்வாகம் கருத்து கேட்டுள்ளது, பொள்ளாச்சி, கிணத்துக்கடவு ரயில் பயணியரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.
கோவை - மயிலாடுதுறை இடையே கிணத்துக்கடவு, பொள்ளாச்சி வழியாக, ரயில் இயக்க வேண்டுமென அரசியல் கட்சியினர், பொள்ளாச்சி, கிணத்துக்கடவு ரயில் பயணியர் நலசங்கம் சார்பில் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டது. சமீபத்தில், பொள்ளாச்சி நகர பா.ஜ., அனுப்பிய மனுவில் கூட, இந்த கோரிக்கை வலியுறுத்தப்பட்டது.
இந்நிலையில், சென்னை தலைமையக தெற்கு ரயில்வே நிர்வாகம், மயிலாடுதுறை - பாலக்காடுக்கு ரயில் இயக்குவதற்காக அந்தந்த ரயில்வே நிர்வாகத்திடம் கருத்து கேட்டுள்ளது. அதில், மயிலாடுதுறை - பாலக்காடு பயணியர் ரயில் முன்பதிவில்லா விரைவு ரயில்சேவையாக இயக்க திட்டமிட்டுள்ளது.
அட்டவணை தயார்
அதன்படி, மயிலாடு துறை - தஞ்சாவூருக்கு (06415/ 06416) காலை, 7:00 மணிக்கு புறப்பட்டு ரயில், தஞ்சாவூரை காலை, 8:55 மணிக்கு சென்றடையும். திருச்சிக்கு, 10:25 மணிக்கு வந்து, 10:30 மணிக்கு கிளம்பும். பழநிக்கு, 12:53க்கு வந்து, 12:55 கிளம்பி, உடுமலை வழியாக பொள்ளாச்சிக்கு மதியம், 1:55 மணிக்கு வரும். இங்கு மூன்று நிமிடம் நிறுத்தப்பட்டு, 1:58 மணிக்கு கிளம்பி, பாலக்காட்டுக்கு, 2:40 மணிக்கு சென்றடையும் வகையில் இயக்கப்படும்.
அங்கிருந்து, இந்த ரயில் பெட்டி மாற்றப்பட்டு பாலக்காடு - ஈரோடுக்கு (06818) என்ற ரயில், 2:45 மணிக்கு கிளம்பி, இரவு, 7:10 மணிக்கு ஈரோடு செல்கிறது. மறுநாள் ஈரோட்டில் இருந்து (ரயில் எண்: 06819) காலை, 7:00 மணிக்கு கிளம்பி, 11:35 மணிக்கு பாலக்காட்டுக்கு வந்துடையும்.
மறுமார்க்கம்
மீண்டும் தஞ்சாவூர் இயக்கப்படும் ரயில் (06416), பாலக்காட்டில் இருந்து காலை, 11:40 மணிக்கு கிளம்பி, 12:37 மணிக்கு பொள்ளாச்சியை அடையும். 12:40 மணிக்கு உடுமலை வழியாக சென்று, மதியம், 1:40 மணிக்கு பழநியை அடையும்.
பழநியில் இருந்து மதியம், 1:45 மணிக்கு கிளம்பி திருச்சிக்கு மாலை, 5:10 மணிக்கு சென்று, 5:15 மணிக்கு புறப்படும். தஞ்சாவூருக்கு மாலை, 6:15 மணிக்கு செல்லும் ரயில், 6:20 மணிக்கு மயிலாடுதுறைக்கு கிளம்பி, இரவு, 8:30 மணிக்கு சென்றடையும் வகையில் நேரங்களுடன் ஒப்புதல் பெறுவதற்கு அட்டவணை தயார் செய்யப்பட்டுள்ளது.
இந்த நேரத்தில் வேறு ரயில்கள் இயக்கம் உள்ளதா, ரயில் இயக்கலாமா, வேறு நேரத்தில் இயக்கலாமா என்பது குறித்து, சேலம், மதுரை, திருச்சி, பாலக்காடு கோட்ட ரயில்வே கோட்ட மேலாளர்கள் கருத்து தெரிவிக்க ரயில்வே நிர்வாகம் கேட்டுள்ளது. இதை அறிந்த, பொள்ளாச்சி, கிணத்துக்கடவு ரயில் பயணியர் நலச்சங்கத்தினர் அதிருப்தியடைந்துள்ளனர்.
புறக்கணிப்பு
பொள்ளாச்சி, கிணத்துக்கடவு ரயில் பயணியர் நலச்சங்கத்தினர் கூறியதாவது:
மயிலாடுதுறையில் இருந்து, பொள்ளாச்சி, கிணத்துக்கடவு வழியாக கோவைக்கு ரயில் இயக்க வேண்டுமென, பலமுறை கோரிக்கை விடுக்கப்பட்டது. இங்கு, இருந்து திருச்சி, கும்பகோணம், தஞ்சாவூர் பகுதிகளில் உள்ள கோவில்கள் மற்றும் வேறு பணிகளுக்காக செல்வோருக்கு பயனாக இருக்கும் என, வலியுறுத்தப்பட்டது.
அரசியல் கட்சியினர், மக்கள் பிரதிநிதிகள் என அனைவரும், தெற்கு ரயில்வே நிர்வாகத்துக்கு கோரிக்கை விடுத்தனர். கேட்ட கோரிக்கையை விட்டு, மயிலாடுதுறை - பாலக்காடுக்கு ரயில் இயக்க ரயில்வே நிர்வாகம் கருத்து கேட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதிருப்தி
ஏற்கனவே, பாலக்காட்டில் இருந்து திருச்செந்துார், சென்னை உள்ளிட்ட பகுதிகளுக்கு இயக்கப்படும் ரயில்களில், கேரள பயணியர் அதிகளவு ஏறுவதால், பொள்ளாச்சி, உடுமலை பகுதிகளில் ஏறும் பயணியருக்கு இடம் கிடைக்காத நிலை உள்ளது.
பயணியர் பெரும்பாலும் நின்று கொண்டும், கூட்ட நெரிசலில் சிக்கித்தவித்தபடியும் செல்கின்றனர். இதனால், மன உளைச்சலுக்கு உள்ளாகின்றனர். பெட்டிகளை கூடுதலாக இணைக்க கோரிக்கை விடுத்தும் பலன் இல்லை.
மாற்றம் தேவை
தற்போது, இந்த ரயிலும், பாலக்காட்டில் இருந்து இயக்க அனுமதி வழங்கினால், தமிழக பயணியருக்கு பாதிப்பு ஏற்படும். அனைத்து ரயில்களும் பாலக்காடுக்கு சென்று தமிழகத்துக்கு வருகின்றன. இதனால், இங்குள்ள பயணியருக்கு இன்னல்கள் ஏற்படுகிறது.
அதிகாரிகள் உரிய கவனம் செலுத்தி, பயணியரின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில், மயிலாடுதுறை ரயிலை பொள்ளாச்சி, கிணத்துக்கடவு வழியாக கோவைக்கு இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கருத்து கேட்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள ரயில்வே நிர்வாகம், இந்த கோரிக்கையை பரிசீலிக்க வேண்டும்.
இவ்வாறு, கூறினர்.