/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கோவை-பெங்களூரு 'வந்தே பாரத்' ரயில் முன்பதிவு மீண்டும் துவக்கம்!
/
கோவை-பெங்களூரு 'வந்தே பாரத்' ரயில் முன்பதிவு மீண்டும் துவக்கம்!
கோவை-பெங்களூரு 'வந்தே பாரத்' ரயில் முன்பதிவு மீண்டும் துவக்கம்!
கோவை-பெங்களூரு 'வந்தே பாரத்' ரயில் முன்பதிவு மீண்டும் துவக்கம்!
ADDED : ஜன 20, 2024 03:33 AM

கோவை-பெங்களூரு 'வந்தே பாரத்' ரயிலுக்கான முன் பதிவு நிறுத்தப்பட்டிருந்த நிலையில், 'தினமலர்' நாளிதழில் நேற்று செய்தி வெளியான பின், மீண்டும் துவக்கப்பட்டுள்ளது.
கோவையிலிருந்து பெங்களூருக்கு தினமும் பல்லாயிரக்கணக்கான மக்கள் பயணம் செய்கின்றனர். விமானம், ரயில்கள், அரசு பஸ்கள் மற்றும் கார்கள் போதாத நிலையில், ஒரு நாளுக்கு 120க்கும் அதிகமான ஆம்னி பஸ்கள், இங்கிருந்து பெங்களூரு செல்கின்றன. இதனால், கோவையிலிருந்து பெங்களூருக்கு இன்னும் அதிகளவில் ரயில்களை இயக்க வேண்டுமென்பது நீண்ட காலக் கோரிக்கையாகவுள்ளது.
குறிப்பாக, இரவில், கோவையிலிருந்து புறப்பட்டு, காலையில் பெங்களூரு செல்லும் வகையில் ரயில் இயக்க வேண்டுமென்று, 25 ஆண்டுகளுக்கும் மேலாக, இங்குள்ள தொழில் அமைப்பினர் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் இன்று வரை இரவு நேர ரயில் எதுவும் இயக்கப்படவில்லை. மாறாக, இங்கிருந்து பெங்களூருக்கு இயக்கப்பட்ட இரண்டு ரயில்கள், கேரளாவுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், கோவையிலிருந்து பெங்களூருக்கு 'வந்தே பாரத்' ரயில் சேவை, கடந்த ஜன.,1ல் இருந்து துவக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் இயக்கப்படும் 40 வந்தே பாரத் ரயில்களில், அதிகாலை 5:00 மணிக்கு புறப்படும் ஒரே ரயில் இதுதான்; அதேபோல, ஒரு மணி நேரத்துக்கு சராசரி 57 கி.மீ., என்ற அளவில், மிகவும் மெதுவாக இயக்கப்படும் வந்தே பாரத் ரயிலும் இது மட்டுமே.
கட்டணமும் அதிகம்; பயண நேரமும் குறையவில்லை என்ற வருத்தம் இருப்பினும், இந்த ரயிலுக்கான தேவையும், வரவேற்பும் சிறப்பாகவே உள்ளது. அடுத்த ஒரு வாரத்திற்கான 'புக்கிங்' பெருமளவில் நிரம்பி விட்டது. ஆனால் பிப்.,1ல் இருந்து இந்த ரயிலில் பயணம் செய்வதற்கான முன்பதிவு, கடந்த சில நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இதற்கான காரணமும் தெரிவிக்கப்படவில்லை.
வழக்கமாக, 120 நாட்களுக்கு முன்பே, 'புக்கிங்' திறக்கப்படும் நிலையில், இந்த ரயிலில், 15 நாட்களுக்குப் பின் பயணம் செய்வதற்கு, டிக்கெட் முன் பதிவு செய்ய முடியாத நிலை இருந்தது. இதுகுறித்து, நமது நாளிதழில் நேற்று செய்தி வெளியானது. அதன் எதிரொலியாக, இந்த ரயிலுக்கான முன் பதிவு நேற்று மதியமே மீண்டும் துவக்கப்பட்டது. ஆனால் பயண நேரம், புறப்பாடு எதுவும் மாற்றப்படவில்லை.
இந்த ரயிலை, காலை 5:00 மணிக்குப் பதிலாக காலை 6:10 மணிக்குப் புறப்படும் வகையிலும், பெங்களூரில் இருந்து மதியம் 1:40 மணிக்கு, கோவைக்குப் புறப்படுவதற்குப் பதிலாக மதியம் 2:30 மணிக்குப் புறப்படும் வகையிலும் நேரத்தை மாற்ற வேண்டும்; பயண நேரத்தை 6 மணி நேரம் 40 நிமிடங்கள் என்பதை, 5 மணி நேரம் 45 நிமிடம் என குறைக்க வேண்டுமென்ற கோரிக்கை, மேலும் வலுத்து வருகிறது.
-நமது சிறப்பு நிருபர்-