/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கோவை மாநகராட்சியின் எல்லை... 438 சதுர கி.மீ., விரிகிறது! தமிழக அரசுக்கு சென்றது பரிந்துரை
/
கோவை மாநகராட்சியின் எல்லை... 438 சதுர கி.மீ., விரிகிறது! தமிழக அரசுக்கு சென்றது பரிந்துரை
கோவை மாநகராட்சியின் எல்லை... 438 சதுர கி.மீ., விரிகிறது! தமிழக அரசுக்கு சென்றது பரிந்துரை
கோவை மாநகராட்சியின் எல்லை... 438 சதுர கி.மீ., விரிகிறது! தமிழக அரசுக்கு சென்றது பரிந்துரை
ADDED : செப் 30, 2024 04:49 AM

கோவை: கோவை மாநகராட்சியோடு ஒரு நகராட்சி, நான்கு பேரூராட்சிகள் மற்றும், 11 ஊராட்சிகள் இணைக்கப்படுகின்றன. தற்போது, 257.04 சதுர கி.மீ., ஆக உள்ள மாநகராட்சி பரப்பளவு, 438.54 சதுர கி.மீ., பரப்பளவுக்கு விரிவடைகிறது. இதற்கான முன்மொழிவை, தமிழக அரசுக்கு மாவட்ட நிர்வாகம் அனுப்பி இருக்கிறது.
கோவை மாவட்டம், 4,723 சதுர கி.மீ., பரப்பு கொண்டது. இதில், நகர்ப்பகுதி - 1,519 சதுர கி.மீ., ஊரக பகுதி - 3,104 சதுர கி.மீ., கோவை மாநகராட்சி, ஏழு நகராட்சிகள், 12 ஒன்றியங்கள், 33 பேரூராட்சிகள், 228 கிராம ஊராட்சிகள், ஒரு மாவட்ட பஞ்சாயத்து ஆகியவை உள்ளன.
இதில், மாவட்ட பஞ்சாயத்து, ஊராட்சி ஒன்றியங்கள் மற்றும் கிராம ஊராட்சிகள் இணைந்த ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளின் பதவி காலம், வரும் டிச., மாதம் முடிகிறது. ஊரக உள்ளாட்சிகளுக்கு மட்டும் தேர்தல் நடத்த வேண்டியிருக்கிறது.
பரிந்துரை சென்றது
முன்னதாக, நகர்ப்பகுதியை ஒட்டியுள்ள உள்ளாட்சிகளை, மாநகராட்சியுடன் இணைக்கலாமா; எந்தெந்த உள்ளாட்சிகளை சேர்க்கலாம் என்கிற பரிந்துரை அனுப்ப, தமிழக அரசு அறிவுறுத்தியது.
கோவை மாநகராட்சிக்கு அருகாமையில், 5 கி.மீ., சுற்றளவுக்குள் அமைந்திருக்கும் உள்ளாட்சி அமைப்புகளிடம் மாவட்ட நிர்வாகம் கருத்து கோரியது.
இறுதியாக, ஒரு நகராட்சி, நான்கு பேரூராட்சிகள் மற்றும், 11 ஊராட்சிகள் என மொத்தம், 16 உள்ளாட்சி அமைப்புகளை இணைத்து, கோவை மாநகராட்சி எல்லையை விஸ்தரிப்பு செய்ய, பரிந்துரை அனுப்பப்பட்டிருக்கிறது.
இணையும் பகுதிகள்
தற்போதைய கோவை மாநகராட்சியுடன் மதுக்கரை நகராட்சி, இருகூர், பேரூர், பள்ளபாளையம், வெள்ளலுார் ஆகிய பேரூராட்சிகள், குருடம்பாளை யம், சோமையம்பாளையம், பேரூர் செட்டி பாளையம், கீரணத்தம், நீலாம்பூர், மயிலம்பட்டி, பட்டணம், வெள்ளானைப்பட்டி, கள்ளிபாளையம், சின்னியம்பாளையம், சீரப்பாளையம் ஆகிய ஊராட்சிகள் இணைக்க திட்டமிடப்பட்டு உள்ளது.
தற்போது, 100 வார்டுகளுடன் 257.04 சதுர கி.மீ.,க்கு மாநகராட்சி பரப்பளவு இருக்கிறது. 16 உள்ளாட்சி அமைப்புகளை இணைப்பதால், 438.54 சதுர கி.மீ., என மாநகராட்சி பரப்பளவு விரிவடைகிறது.
அடுத்த உள்ளாட்சி தேர்தல் நடத்துவதற்கு முன், மீண்டும் வார்டு மறுவரையறை செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது. மாநகராட்சி பரப்பு இரண்டு மடங்கு அதிகரிப்பதால், 150 வார்டுகளாகவோ அல்லது, 200 வார்டுகளாகவோ அதிகரிக்க வாய்ப்பிருக்கிறது.
13 ஆண்டுகளாச்சு; வசதியில்லை
இதற்கு முன், 2011ல் கோவை மாநகராட்சி எல்லை விஸ்தரிக்கப்பட்டு, 100 வார்டுகளாக பிரிக்கப்பட்டது. குறிச்சி, குனியமுத்துார், கவுண்டம்பாளையம் ஆகிய மூன்று நகராட்சிகள், வடவள்ளி, வீரகேரளம், துடியலுார், வெள்ளக்கிணறு, சரவணம்பட்டி, சின்ன வேடம்பட்டி, காளப்பட்டி ஆகிய ஏழு பேரூராட்சிகள் மற்றும் விளாங்குறிச்சி ஊராட்சி ஆகியவை, கோவை மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டன.
13 ஆண்டுகள் உருண்டோடி விட்டன; இன்னும் உள்கட்டமைப்பு வசதிகள் மக்களின் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் செய்து கொடுக்கப்படவில்லை. தங்கு தடையின்றி குடிநீர் கிடைப்பதில்லை; பாதாள சாக்கடை திட்டம் முழுமையாக செயல்படுத்தவில்லை.
சாலை வசதி சுத்த மோசம். மாநகராட்சி எல்லையை மேலும் விஸ்தரிப்பு செய்வதால், 'ரியல் எஸ்டேட்' தொழில் கொடி கட்டி பறக்கும். அப்பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கான சொத்து வரி உயரும்; அடிப்படை வசதிகள் மேம்படுமா என்பது, மில்லியன் டாலர் கேள்வியாகவே இருக்கிறது.