/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'கோவை தங்க நகை பூங்கா பணி 18 மாதங்களில் முடியும்'
/
'கோவை தங்க நகை பூங்கா பணி 18 மாதங்களில் முடியும்'
ADDED : மே 20, 2025 01:17 AM

கோவை : கோவை சிட்கோ தொழிற்பேட்டையில், 126 கோடி ரூபாயில் தங்க நகை பூங்கா அமைக்கப்படும் என, முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார். இதன் ஒரு கட்டமாக, நகை உற்பத்தியாளர் சங்க பிரதிநிதிகளுடன் கலந்தாய்வு கூட்டம், கோவை 'கொடிசியா'வில் நேற்று நடத்தப்பட்டது.
தமிழக குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் துறை அமைச்சர் அன்பரசன் கூறியதாவது:
கோவையில் தங்க நகைப்பூங்கா அமைக்க திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. குறிச்சியில், 2.46 ஏக்கரில், 8.5 லட்சம் சதுரடியில் தொழிற்பூங்கா அமைக்கப்படும். நகைப்பட்டறை, 3டி பிரிண்டிங், லேசர் பிரிண்டிங், ஹால்மார்க் தர பரிசோதனை கூடம், பாதுகாப்பு பெட்டகம், கூட்டரங்கம், பயிற்சி மையம் என, பல்வேறு வசதிகள் அமையும்.
குறைந்த வாடகை நிர்ணயிக்க வேண்டும்; மின் மானியம் வழங்க வேண்டும். ஒருவருக்கே நிறைய பட்டறைகள் வழங்காமல், உரிய வழிமுறைகள் வகுக்க வேண்டும் உட்பட பல ஆலோசனைகளை, சங்கத்தினர் வழங்கினர். இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும்.
பணிகளை துவக்கியதும், 18 மாதங்களில் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. கோவையில் அமைக்கப்படும் இப்பூங்கா, இந்தியாவிலேயே மிகச்சிறந்ததாக இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.