/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஸ்டார்ட்அப் தலைநகராக உருவெடுக்கும் கோவை
/
ஸ்டார்ட்அப் தலைநகராக உருவெடுக்கும் கோவை
ADDED : செப் 30, 2025 10:51 PM
தெ ன்னிந்தியாவின் மான்செஸ்டர் என அறியப்பட்ட கோவை, பல்வேறு தளங்களிலும் தொழில்முனைவை விரிவுபடுத்தியிருக்கிறது. தற்போது இந்தியாவின் மிகச்சிறந்த ஸ்டார்ட் அப் மையங்களுள் ஒன்றாக மாறியிருக்கிறது.
இதுதொடர்பாக, ஸ்டார்ட்அப் இந்தியா ஆலோசகர் ஜெய்பிரகாஷ் கூறியதாவது:
ஸ்டார்ட்அப் பிளிங்க் வெளியிட்ட 2025 சூழல் தரவரிசைப்படி, கோவை உலக அளவில் 282ம் இடத்தில் உள்ளது. கோவையில் 112 ஸ்டார்ட் அப்கள் இயங்கி வருகின்றன. இந்நிறுவனங்கள் சுமார் 26.3 லட்சம் அமெரிக்க டாலர் நிதி திரட்டியுள்ளன. கடந்த ஓராண்டில் மட்டும் 4.6 சதவீத வளர்ச்சி எட்டப்பட்டுள்ளது.
துறைகள் அடிப்படையில், சாப்ட்வேர் மற்றும் டேட்டா துறையில் 146வது இடம், இ-காமர்ஸ் மற்றும் ரீடெய்ல் வர்த்தகத்தில் 165வது இடம், கல்வி-தொழில்நுட்பத்தில் 178வது இடம் பிடித்துள்ளது.
மாநில அளவில் டி.பி.ஐ.ஐ.டி.,யில் பதிவு செய்த ஸ்டார்ட் அப்களில் 15 சதவீதம் கோவையைச் சேர்ந்தவை. கோவையில் கடந்த 4 ஆண்டுகளில், 1,350க்கும் மேற்பட்ட ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் 52 துறை சார்ந்து துவக்கப்பட்டுள்ளன.
ஜூஸிகெமிஸ்ட்ரி, நாப்சீப், லீப் இந்தியா புட் லாஜிஸ்டிக்ஸ் உள்ளிட்டவை நகரின் முன்னணி ஸ்டார்ட் அப் நிறுவனங்களுள் சில. அமோகா பாலிமர்ஸ், ஏ.டி., லாக்ஸ் ஆகிய நிறுவனங்கள் 2025ம் ஆண்டுக்கான முன்னணி ஸ்டார்ட்அப் வரிசையில் இடம்பிடித்துள்ளன.
ஏராளமான நிறுவனங்கள், குறிப்பிடத்தக்க அளவிலான முதலீடுகளை ஈர்த்துள்ளன.
அரசு ஆதரவு அரசின் ஆதரவும் வலுவாக உள்ளது. ஸ்டார்ட்அப் டிஎன்-இன் டான்சீடு 5.0, ஆர்.கே.வி.ஒய், ராப்டார் உள்ளிட்ட திட்டங்கள் வாயிலாக ஏராளமானோர் பயனடைந்துள்ளனர்.
ஜவுளித்துறை பாரம்பரியம், 22க்கும் மேற்பட்ட இன்குபேஷன் மையங்கள், பன்னாட்டு நிறுவனங்கள், உலகளாவிய திறன் மையங்கள், ரூ.15 ஆயிரம் கோடி மதிப்பிலான ஐ.டி., துறை ஏற்றுமதி போன்றவை ஸ்டார்ட் நிறுவனங்களுக்கு உந்து சக்தியாக உள்ளன.
விமான சேவைகள் குறைவு போன்ற சவால்கள் இருப்பினும், கோவையில் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் வளர்ச்சியை நோக்கி நடைபோடுகின்றன.
கோவை, இரண்டாம் நிலை நகரங்களில், எழுச்சி பெறும் ஸ்டார்ட்அப் மையமாக திகழ்கிறது. மென்பொருள், வேளாண் தொழில்நுட்பம், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, உணவு பதனிடல் உள்ளிட்ட துறைகளில் விரிவடைந்து வருகிறது.
கோவை, ஸ்டார்ட் அப் களின் தலைநகர் என்ற பெருமையை எட்டும் நாள் வெகு தொலைவில் இல்லை.
இவ்வாறு, அவர் தெரிவித்தார்.