தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ கோவை அருகே பரிதாபம் சுருக்கு கம்பியில் சிக்கிய காட்டு யானை: மயக்க மருந்து செலுத்தி காலில் 3 மணி நேரம் சிகிச்சை

கோவை அருகே பரிதாபம் சுருக்கு கம்பியில் சிக்கிய காட்டு யானை: மயக்க மருந்து செலுத்தி காலில் 3 மணி நேரம் சிகிச்சை

கோவை அருகே பரிதாபம் சுருக்கு கம்பியில் சிக்கிய காட்டு யானை: மயக்க மருந்து செலுத்தி காலில் 3 மணி நேரம் சிகிச்சை


UPDATED : செப் 07, 2026 10:20 PM

ADDED : செப் 07, 2026 09:21 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 07, 2026 10:20 PM ADDED : செப் 07, 2026 09:21 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சிறுமுகை: சுருக்கு கம்பியில் சிக்கிய பெண் யானையின் காலில் சுமார் 3 அங்குல ஆழத்துக்கு காயம் ஏற்பட்டது. இதையடுத்து யானைக்கு மயக்க மருந்து செலுத்தி 3 மணி நேரம் வனத்துறையினர் சிகிச்சை அளித்தனர்.

கோவை மாவட்டம் சிறுமுகை வனச்சரகம் பெத்திக்குட்டை பிரிவு உளியூர் சுற்று வனப்பகுதியில், வனப்பணியாளர்கள் கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு ரோந்து சென்றனர். அப்போது, சுமார் 10 வயது மதிக்கத்தக்க பெண் யானை ஒன்றின் இடது முன்னங் காலில், இரும்பு சுருக்கு கம்பி சுற்றிய நிலையில் காணப்பட்டது. மேலும் அந்த யானையால் நடக்க முடியாமல், வலியில் துடித்தவாறு மிகவும் சோர்வாக நின்றிருந்தது.

இதையடுத்து, வனப்பணியாளர்கள் உடனடியாக சிறுமுகை வனச்சரகர் தினேசுக்கு தகவல் தெரிவித்தனர். அவர் மாவட்ட வன அலுவலர் வெங்கடேஷ் பிரபுவுக்கு தகவல் அளித்தார். இதையடுத்து மாவட்ட வன அலுவலர் தலைமையில், சிறுமுகை வனச்சரகர் தினேஷ், பெரியநாயக்கன்பாளையம் வனச்சரகர் மனோஜ் மற்றும் ஆனைமலை புலிகள் காப்பகம், சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தை சேர்ந்த 5 வனக்கால்நடை மருத்துவர்கள் கொண்ட 60 வனப்பணியாளர்கள் குழுவினர், சம்பவ இடத்திற்கு விரைந்தனர். சுமார் 3 அங்குல ஆழத்துக்கு யானையின் காலை சுற்றிலும் காயம் இருப்பதை கால்நடை மருத்துவர்கள் கண்டனர். உடனடியாக யானைக்கு மயக்க மருந்து செலுத்தி சிகிச்சை அளிக்க வனத்துறையினர் முடிவு செய்தனர்.

இதையடுத்து நேற்று முன்தினம் மாலை 5 மணியளவில் பெண் யானைக்கு, அங்கேயே ஊசி மூலம் மயக்க மருந்து செலுத்தப்பட்டது. சிறிது நேரத்தில் யானை மயக்கம் அடைந்தது. அதன்பின்னர் யானையின் காலில் சிக்கியிருந்த சுருக்கு கம்பி வெட்டி எடுக்கப்பட்டது. பின்னர் காயத்துக்கு தேவையான மருந்துகள் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டது. மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை சிகிச்சை நீடித்தது. சிறிது நேரத்தில் மயக்கம் தெளிந்த பின்னர் காட்டு யானை வனப்பகுதிக்குள் நன்றாக நடந்து சென்றது.

இதுகுறித்து, மாவட்ட வன அலுவலர் வெங்கடேஷ் பிரபு கூறுகையில், யானையின் காலில் கம்பி இருந்துள்ளதால் சட்ட விதிமுறைகள் படி, வழக்குப்பதிவு செய்யப்பட்டு, விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. சத்தியமங்கலம் வனக்கோட்டத்தின் விளாமுண்டி சரக எல்லையின் அருகில் இச்சம்பவம் கண்டறியப்பட்டுள்ளதால், சத்தியமங்கலம் துணை இயக்குனருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைவில் இந்த வாரத்தில் கூட்டு ரோந்து மேற்கொள்ளப்படும், என்றார்.

வேட்டைக்காரர்கள் ஊடுருவல் காட்டு யானை சுருக்கு கம்பியில் சிக்கியதால், சத்தியமங்கலம் பகுதியில் சிறுத்தை போன்ற வன விலங்குகளை கொல்வதற்கு வேட்டைக்காரர்கள் ஊருருவியிருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து தான் வனத்துறையினர் அங்கு அதிரடியாக கூட்டு ரோந்து செல்ல முடிவு செய்துள்ளனர்.

யானையின் காலில் காயம் ஏற்பட்டது எப்படி?

இது குறித்து வனத்துறையினர் கூறியதாவது:

'யானையின் காலில் ஏற்பட்ட காயம் ஆழமாக இருந்தது. இந்த காயம் யானை வனப்பகுதியில் போடப்பட்டிருந்த இரும்பு வேலியை தாண்டும் போது காலில் இரும்பு கம்பி சுற்றி ஏற்பட்டதா? அல்லது சுருக்கு கம்பியில் கால் சிக்கியதால் ஏற்பட்டதா? என்று தெரியவில்லை. ஆனால் காயத்தை பார்க்கும் போது சுருக்கு கம்பியில் சிக்கியது போல தான் தெரிகிறது. காட்டில் சிறுத்தை அல்லது காட்டு பன்றிகளை பிடிப்பதற்காக வேட்டைக்காரர்கள் சுருக்கு கம்பிகளை வைத்துள்ளனர். அந்த சுருக்கு கம்பியில் யானை காலை வைத்திருக்கலாம். உடனே அதில் யானையின் கால் சிக்கிக் கொண்டது. சுருக்கு கம்பி மெல்லியதாக இருந்தாலும் யானையின் காலில் சுற்றியவுடன் அது இறுகியிருக்கிறது. யானை காலை உதறியபோதிலும் சுருக்கு கம்பி கீழே விழவில்லை. சுமார் 2 மாதங்களாக சுருக்கு கம்பி யானையின் காலிலேயே இருந்ததாலும். யானை தொடர்ந்து நடந்ததாலும் காலில் ஏற்பட்ட அழுத்தத்தால் சுருக்கு கம்பி இறுகி சுமார் 3 அங்குல ஆழத்துக்கு காயம் ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் வலி தாங்காமல் தான் யானை தொடர்ந்து நடக்க முடியாமல் உளியூர் பகுதிக்கு வந்துள்ளது. அதன் பின்னர் தான் சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சைக்கு பின் யானை நன்றாக நடந்து காட்டுக்குள் சென்றது. இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us