/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஈஷாவில் இரண்டாம் நாளாக கோவை எஸ்.பி., விசாரணை
/
ஈஷாவில் இரண்டாம் நாளாக கோவை எஸ்.பி., விசாரணை
ADDED : அக் 03, 2024 06:26 AM

தொண்டாமுத்தூர் : கோவை ஈஷா யோகா மையத்தில், சென்னை ஐகோர்ட் உத்தரவின்படி, இரண்டாம் நாளாக மாவட்ட எஸ்.பி., கார்த்திகேயன் விசாரணை நடத்தினார்.
கோவை மாவட்டம், வடவள்ளியை சேர்ந்த காமராஜ்,69 என்பவர் சென்னை ஐகோர்ட்டில், ஈஷா யோகா மையத்தில் உள்ள தனது இரு மகள்களையும், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என, ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார். இதனை விசாரித்த நீதிபதிகள், கோவை மாவட்ட போலீசார் இதுகுறித்து நேரில் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தனர்.
இதனையடுத்து, கோவை மாவட்ட எஸ்.பி., கார்த்திகேயன் மற்றும் சமூக நலத்துறை மாவட்ட அலுவலர் அம்பிகா ஆகியோர் தலைமையிலான குழுவினர், ஈஷா யோகா மையத்தில் உள்ள பிரம்மச்சாரிகள் மற்றும் தன்னார்வலர்களிடம் நேற்றுமுன்தினம், சுமார், 9 மணி நேரம் விசாரணை நடத்தினர்.
இரண்டாம் நாளாக நேற்றும் காலை, 9:30 முதல் இரவு, 8:00 மணி வரை விசாரணை நடந்தது. இதில், அதிகாரிகள் ஐந்து குழுக்களாக பிரிந்து, ஈஷா யோகா மையத்தில் தங்கி உள்ள பிரம்மச்சாரிகள், தன்னார்வலர்களிடம், அனைவரும் சுய விருப்பத்தின் பேரில் தங்கியுள்ளீர்களா, உணவு முறைகள் எப்படி, யாரேனும் மிரட்டுகின்றனரா என்பது போன்ற கேள்விகளை கேட்டு, வீடியோ பதிவும் செய்து கொண்டனர்.
இரண்டு நாட்களில், 500க்கும் மேற்பட்டவர்களிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இவ்வழக்கின் விசாரணை, நாளை (அக்., 4ம் தேதி) ஐகோர்ட்டில் வருகிறது.
எஸ்.பி., கார்த்திகேயன் நிருபர்களிடம் கூறுகையில், கோர்ட் உத்தரவின்படி, விசாரணை நடத்தப்பட்டது. விசாரணை அறிக்கை கோர்ட்டில் தாக்கல் செய்யப்படும்,என்றார்.